திருமணத்துக்கு பின் துரத்திய பிரச்சனைகள்... நயன் - விக்கி ஜோடி கடந்த ஓராண்டில் சிக்கிய சர்ச்சைகள் இத்தனையா..!
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி திருமணத்துக்கு பின்னர் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியது. அவை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்தாண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்த காதல் ஜோடி திருமண பந்தத்தில் இணைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் கணவன், மனைவியாக காலடி எடுத்து வைத்துள்ள விக்கி - நயன் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே திருமணநாளை ஒட்டி இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சோதனை காலம் என குறிப்பிட்டு இருந்தார். நிஜமாகவே திருமணத்துக்கு பின் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளது இந்த ஜோடி, அவை என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
செருப்பு சர்ச்சை
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருப்பதியில் தான் திருமணம் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் அங்கு அனுமதி கிடைக்காததால் சென்னையில் திருமணம் செய்துகொண்ட கையோடு இருவரும் ஜோடியாக திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். இதையடுத்து கோவில் வளாகத்தில் இருவரும் போட்டோஷூட் ஒன்றை நடத்தினர். அந்த போட்டோஷூட் தான் அவர்களுக்கு வினையாக அமைந்தது. அந்த போட்டோஷூட் எடுக்கும்போது வெயில் அதிகமாக இருந்ததன் காரணமாக நடிகை நயன்தாரா காலில் செருப்பு அணிந்திருந்தார். கோவில் வளாகத்தில் செருப்பு அணிய அனுமதி இல்லாதபோது நயன்தாரா எப்படி செருப்பு அணியலாம் என எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து அதற்கு மன்னிப்பு கேட்டு விக்னேஷ் சிவன் அறிக்கை வெளியிட்டார்.
திருமண வீடியோ
நயன் - விக்கி ஜோடியின் திருமணத்திற்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு காரணம் இந்த திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடி கொடுத்து வாங்கி இருந்தது. இதன்காரணமாக அங்கு வந்த பிரபலங்களும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே நெட்பிளிக்ஸ் நிறுவனம் பாதுகாத்து வைத்திருந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் ஆர்வக்கோளாறில் வெளியிட்டதால், கடுப்பாகி தாங்கள் செலவு செய்த தொகையை திருப்பி கேட்டதாகவும், இறுதியில் நயன்தாரா சமாதானம் செய்ததாகவும் கூறப்பட்டது. அந்த சர்ச்சை முடிந்தாலும், ஓராண்டாகியும் அவர்களது திருமண வீடியோ வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்... முதலாம் ஆண்டு திருமணநாளை மகன்களுடன் கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் போட்டோஸ்
வாடகைத் தாய் சர்ச்சை
திருமணமான நான்கே மாதங்களில் நாங்கள் பெற்றோர் ஆகிவிட்டோம் எனக் கூறி குழந்தைகளுடன் விக்கி - நயன் ஜோடி போட்டோ வெளியிட்டனர். இதைப்பார்த்த ரசிகர்கள் எப்புட்ரா என ஷாக் ஆக, பின்னர் தான் அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது. சட்டப்படி திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பின்னர் தான் இந்த முறையில் குழந்தை பெற்றெடுக்க முடியும், ஆனால் நீங்கள் மட்டும் எப்படி 4 மாதத்திலேயே குழந்தை பெற்றுக்கொண்டீர்கள் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டதோடு, அவர்கள் சட்டத்தை மீறி உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது. பின்னர் தாங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்துகொண்டதாக ஆதாரங்களை சமர்பித்து தாங்கள் எந்தவித விதிமீறலும் செய்யவில்லை எனக்கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது விக்கி - நயன் ஜோடி.
ஏகே 62 படத்திலிருந்து விக்கி நீக்கம்
அஜித் நடிப்பில் உருவாக இருந்த ஏகே 62 படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வெல்லாம் முடித்து ஷூட்டிங் செல்ல தயாராகி வந்த சூழலில், திடீரென அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கி அதிரடியாக மகிழ் திருமேனியை களமிறக்கியது லைகா நிறுவனம். இதற்கான காரணத்தை நீண்ட நாட்களுக்கு பின் வெளியிட்ட விக்னேஷ் சிவன், கதை லைகா நிறுவனத்துக்கு திருப்தி அளிக்காததால் அப்படத்தில் இருந்து வெளியேறியதாக தெரிவித்தார்.
ரசிகையை முறைத்த நயன்தாரா
விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த ஏப்ரல் மாதம் திருச்சியில் உள்ள தங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது அங்கு அவர்களை பார்க்க ஏராளமான ரசிகர்களும் குவிந்தனர். அவர்களுடன் நயன்தாரா புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதில் ரசிகை ஒருவர் நயன்தாராவின் தோழில் கைபோட்டு போட்டோ எடுக்க முயன்றபோது அவரை பார்த்து நயன்தாரா முறைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையானது. அதேபோல் குலதெய்வ வழிபாடை முடித்து சென்னைக்கு ரயிலில் வரும் போது, அவர்களைக் காண ரயில் நிலையத்தில் கூட்டம் கூடியதால், டென்ஷன் ஆன நயன்தாரா, வீடியோ எடுத்தவர்களை பார்த்து போனை உடைத்துவிடுவேன் என கோபமாக பேசியதும் சர்ச்சையானது.
இதையும் படியுங்கள்... நேத்து தான் திருமணம் நடந்துச்சு! முதலாம் ஆண்டு திருமண நாளில் நயனுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய விக்கி!