பாக்ஸ் ஆபிஸில் சோழர்களோடு மோதும் பாண்டியர்கள்... பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீசாகும் யாத்திசை
பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகத்துக்கு போட்டியாக யாத்திசை என்கிற வரலாற்று கதையம்சம் கொண்ட திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது.
மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி அதிரி புதிரியான வெற்றியை பதிவு செய்தது. இதனால் அப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.
பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் ரிலீஸ் ஆக உள்ளதால், அதற்கு ஒரு வாரம் முன்னதாக, அதாவது வருகிற ஏப்ரல் 21-ந் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக தான் இரண்டாம் பாகம் இருக்கும் என்பதால் ஒரு வாரம் முன்னதாக முதல் பாகத்தை ரீ-ரிலீஸ் செய்துவிட்டு இரண்டாம் பாகத்தை மறுவாரம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... புஷ்பாவின் பிறந்தநாள்! ரூ.100 கோடியில் வீடு; ரூ.300 கோடிக்கு மேல் சொத்து என ராஜ வாழ்க்கை வாழும் அல்லு அர்ஜுன்
இந்நிலையில், பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக மற்றுமொரு வரலாற்று கதையம்சம் கொண்ட திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதுதான் யாத்திசை. இப்படத்தை தரணி ராஜேந்திரன் என்கிற புதுமுக இயக்குனர் தான் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 21-ந் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருவதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.
இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் யாத்திசை திரைப்படம் பாண்டியர்களின் வரலாற்றைப் பின்னணியாக கொண்டு உருவாகி உள்ள படமாகும். மறுபுறம் பொன்னியின் செல்வன் 2 சோழர்களின் வரலாற்றைப் பேசும் படமாக ரிலீஸாக உள்ளது. இப்படி பாண்டியர்களும், சோழர்களும் பாக்ஸ் ஆபிஸ் யுத்தத்தில் மோதிக் கொள்வதைக் காண்பதற்கு ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்... கலாஷேத்ரா விவகாரத்தில் அரசியல் நடக்கிறது... ஹரி பத்மன் சிறந்த ஆசிரியர் - பிக்பாஸ் அபிராமி பரபரப்பு பேட்டி