- Home
- Cinema
- Ambika vs Radha : ராதா புகாருக்கு அம்பிகாவின் பதிலடி.. “உண்மையில் பாதிக்கப்பட்டது நான்தான்” என தங்கைக்கு ட்விஸ்ட் கொடுத்த அக்கா
Ambika vs Radha : ராதா புகாருக்கு அம்பிகாவின் பதிலடி.. “உண்மையில் பாதிக்கப்பட்டது நான்தான்” என தங்கைக்கு ட்விஸ்ட் கொடுத்த அக்கா
Ambika Breaks Silence : 46 கோடி ரூபாய் செக் மோசடி செய்ததாக தன் அக்கா மீது நடிகை ராதா புகார் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு நடிகை அம்பிகா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Ambika Breaks Silence on Radha Complaint
தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த சகோதரிகள் தான் ராதா மற்றும் அம்பிகா. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இருவரும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும் பிரபலமானவர்கள். திரையுலகில் சகோதரிகளாக இணைந்து தனி அடையாளத்தை உருவாக்கிய இவர்களின் குடும்பத்தில் தற்போது சொத்து மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சுமார் ரூ.46 கோடி மதிப்பிலான செக் மோசடியில் ஈடுபட்டதாக தன்னுடைய அக்கா அம்பிகா மீது நடிகை ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பழைய காசோலைகள் பயன்படுத்தப்பட்டதாக ராதா புகார்
ராதா அளித்துள்ள புகாரின்படி, ‘ஏஆர்எஸ் கார்டன் ஸ்டுடியோ’ என்ற பெயரில் அவர் வங்கி கணக்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பளம், மின்சாரம் உள்ளிட்ட பயன்பாட்டுக் கட்டணங்கள், வரி மற்றும் தோட்டப் பராமரிப்பு போன்ற செலவுகளுக்காக சில கையெழுத்திடப்பட்ட காசோலைகளை வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், 2025 ஜனவரி மாதத்தில் நிறுவனத்தின் பெயர் ‘ஆர்ஆர் கார்டன்ஸ்’ என மாற்றப்பட்டதாகவும், அதன்பிறகு புதிய காசோலைப் புத்தகம் பயன்படுத்தப்பட்டதாகவும் ராதா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் பழைய காசோலைப் புத்தகம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 17-ம் தேதி வங்கியிலிருந்து கிடைத்த தகவலின் மூலம் பழைய காசோலைகள் தொடர்பான விஷயம் தனது கவனத்திற்கு வந்ததாக ராதா புகாரில் குறிப்பிட்டுள்ளார். பயன்பாட்டில் இல்லாத பழைய காசோலைகளில் ஐந்து காசோலைகள் அம்பிகாவின் பெயரில் பணமாக்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்டதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.
அந்த காசோலைகளை தாம் அம்பிகாவிடம் வழங்கவில்லை என்றும், அந்த அளவிலான பணப் பரிவர்த்தனை தொடர்பாக அவருடன் எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும் ராதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் புகார்
இதையடுத்து சம்பந்தப்பட்ட பணப் பரிவர்த்தனையை நிறுத்துமாறு வங்கிக்கு அறிவுறுத்தியதாகவும், பின்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதா புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் ஆகியோரின் பெயர்களையும் ராதா குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை ராதா அளித்ததாக வெளியான புகார் தொடர்பாக அம்பிகா தரப்பில் என்ன விளக்கம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது அம்பிகா அளித்துள்ள பேட்டி கவனம் பெற்றுள்ளது. ராதா ஏன் தன் மீது புகார் அளித்தார் என்பதே தனக்கு புரியவில்லை என்றும், இந்த விவகாரத்தில் உண்மையில் பாதிக்கப்பட்டது தான்தான் என்றும் அம்பிகா தெரிவித்துள்ளார்.
ராதா அளித்த புகாரை பார்த்தபோது தனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்ததாக கூறியுள்ள அம்பிகா, இந்த சூழலில் புகார் அளித்திருக்க வேண்டியது தானாக இருக்க வேண்டும் என்றும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏஆர்எஸ் கார்டன் குறித்து அம்பிகா சொன்னது என்ன?
அம்பிகாவின் பேட்டியில் முக்கியமாக இடம்பெற்றது ஏஆர்எஸ் கார்டன் தொடர்பான விவகாரம்தான். இந்த சொத்து குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 25 ஏக்கர் நிலத்தை எம்ஜிஆர் இலவசமாக வழங்கியதாக சிலர் கூறி வருவதை மறுத்துள்ள அம்பிகா, தங்களது குடும்பம் சொந்தமாக சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி, தங்களது தாயார் மூலம் தேவர் பிலிம்ஸ் குடும்பத்தினரிடம் இருந்து அந்த சொத்தை வாங்கியதாக கூறியுள்ளார்.
தங்களது குடும்பம் வாங்கிய முதல் சொத்து ஏஆர்எஸ் கார்டன்தான் என்றும், சினிமாவில் தங்களது குடும்பம் வளரத் தொடங்கிய காலத்தில் அந்த இடம் மிக முக்கியமானதாக இருந்ததாகவும் அம்பிகா தெரிவித்துள்ளார்.
“ஏஆர்எஸ் கார்டன் விற்பனைக்கு கிடையாது”
ஏஆர்எஸ் கார்டன் தங்களது குடும்பத்திற்கு வெறும் சொத்து மட்டுமல்ல என்றும், தங்களது வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமான ஒரு பகுதியாக அது இருந்தது. மேலும், “ஏஆர்எஸ் கார்டன் விற்பனைக்கு கிடையாது” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அந்த சொத்து தொடர்பாக சட்டரீதியான பிரச்சினைகள் நடைபெற்று வருவதால், தற்போது அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்
பெயர்ப்பலகை மாற்றப்பட்டதை பார்த்து கண்ணீர்
ஏஆர்எஸ் கார்டன் தொடர்பாக பேசும்போது, தன்னுடைய பெயர்ப்பலகை அகற்றப்பட்டு வேறு பெயர்ப்பலகை வைக்கப்பட்டதை பார்த்த சம்பவத்தையும் அம்பிகா உணர்ச்சிவசப்பட்டு பகிர்ந்துள்ளார். பல ஆண்டுகளாக தங்களது குடும்பத்துடன் தொடர்புடையதாக இருந்த அந்த இடத்தில் பெயர் மாற்றப்பட்டதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கண்ணீர் மல்க பேசி இருக்கிறார். அவரது பேச்சில், ஏஆர்எஸ் கார்டன் என்பது ஒரு நிலம் அல்லது கட்டிடம் என்ற எல்லையைத் தாண்டி, குடும்பத்தின் கடந்த கால உழைப்பு மற்றும் வளர்ச்சியின் அடையாளமாக பார்க்கப்படுவது தெரியவந்துள்ளது.
“இப்போது எல்லாமே பணம்தான்”
பாசம், நன்றி, குடும்ப சென்டிமென்ட் போன்ற உணர்வுகளுக்கு முன்பு இருந்த முக்கியத்துவம் தற்போது குறைந்து வருவதாக அம்பிகா கருத்து தெரிவித்துள்ளார். பணம் வாழ்க்கையில் முக்கியமானதாக மாறிவிட்ட சூழலை சுட்டிக்காட்டிய அவர், “இந்த உலகத்துல எல்லாமே பணம்தான்” என்ற பொருளில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஒருவரிடம் எவ்வளவு பணம் இருந்தாலும், மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதாகவும் அவர் பேசி இருக்கிறார்.
ராதா, அம்பிகாவுக்கு வாரி கொடுத்த எம்ஜிஆர் – உண்மையை போட்டு உடைத்த சித்ரா லட்சுமணன்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

