விஜய் படம் ரிலீசாவதை யாராலும் தடுக்க முடியாது... அடிச்சு சொல்லும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர்
பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த், வாரிசு பட பிரச்சனை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் கடந்த 2019-ம் ஆண்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. அதன்படி தசரா மற்றும் சங்கராந்தி ஆகிய பண்டிகை தினங்களில் தெலுங்கு படங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அதன்பின் எஞ்சியுள்ள தியேட்டர்களை டப்பிங் படங்களுக்கு ஒதுக்கலாம் எனவும் உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவு காரணமாக விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவிலான தியேட்டர்கள் கிடைக்காத சூழல் உருவானது. வாரிசு படம் நேரடி தமிழ் படமாக இருந்தாலும், அதன் இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோயின் என அதில் பணியாற்றிய 60 சதவீத பணியாளர்கள் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் தான்.
இதையும் படியுங்கள்... குழந்தை பிறந்த பின்னும் குறையாத மவுசு... கோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா - கைவசம் இத்தனை படங்களா..!
வாரிசு படத்திற்கு அதிகளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்படாவிட்டால் தமிழ்நாட்டில் ரிலீசாகும் தெலுங்கு படங்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இப்படி இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வரும் நிலையில், பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : “அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழி படங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்கிற நிலை பாகுபலி படத்துக்கு பின்னர் மாறிவிட்டது. பான் இந்தியா அளவில் படங்கள் கொண்டாடப்படும் இந்த காலகட்டத்தில் இது போன்று பிறமொழி படங்களை கட்டுப்படுத்த நினைப்பது சாத்தியமில்லாதது. திரையுலகில் புதிய விதிகளை கொண்டுவருவதும், பின்னர் அவை மீறப்படுவதும் புதிதல்ல. அதனால் வாரிசு படம் ரிலீசாவதை யாராலும் தடுக்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது” என தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... உதயநிதியின் கலகத் தலைவன் எப்படி இருக்கு?.. அமைச்சரிடம் ரிவ்யூ கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் - வைரலாகும் வீடியோ