வாடகைத் தாய் முறையில் நயன் - விக்கி ஜோடிக்கு இரட்டை குழந்தைகள்! வாடகைத் தாய் என்றால் என்ன? - வாங்க பார்க்கலாம்
Nayanthara and Vignesh Shivan Twin Babies : நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றெடுத்துள்ள நிலையில், அதைப்பற்றி தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த செய்தித் தொகுப்பில் நாம் அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சினிமா நடிகைகள் ஏராளமானோர் இந்த முறையை பின்பற்றி குழந்தை பெற்றெடுத்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றெடுத்த நிலையில், தற்போது அந்த வரிசையில் நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட நயன் - விக்கி தம்பதி தற்போது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர். திருமணத்துக்கு முன்னரே லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த இந்த ஜோடி, கடந்த ஆண்டே குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்து, வாடகைத்தாய் முறையை தேர்வு செய்து, அதன்மூலம் குழந்தையும் பெற்றெடுத்துள்ளனர். அதுவும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.
இந்நிலையில், வாடகைத்தாய் முறை என்றால் என்ன என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம். வாடகைத் தாய்மை என்பதும் ஒரு வகை கர்ப்பம் தரிக்கும் முறை ஆகும். உடல்நல பிரச்சனைகளால் கர்ப்பம் ஆக முடியாத பெண்கள், வயிற்றில் குழந்தையை சுமக்க முடியாத அல்லது விரும்பாத பெண்கள் மற்றொரு பெண் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதே வாடகைத் தாய் முறையாகும்.
இதையும் படியுங்கள்... தடையை மீறினாரா லேடி சூப்பர்ஸ்டார்? - பிரபல நடிகையின் டுவிட்டால் குழந்தை பிறந்த கையோடு சர்ச்சையில் சிக்கிய நயன்
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்ணின் கருமுட்டையில் அவரது கணவரின் விந்தணு செலுத்தப்பட்டு, பின்னர் அந்த கருவை, வாடகைத் தாயின் கருப்பையில் பொறுத்துவர். அதன்பிறகு அந்த வாடகைத் தாய் வயிற்றில் குழந்தையை சுமந்து பெற்றெடுப்பார். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் பலருக்கு இந்த வாடகைத்தாய் முறை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
வாடகைத்தாயின் கருமுட்டையில் தந்தையின் விந்தணுக்களை செலுத்தி செயற்கை முறையில் கருவூட்டப்படும் பாரம்பரிய முறையின் படி குழந்தை பெற்றெடுத்தால், வாடகைத் தாயும் குழந்தையின் உயிரியல் தாயாகக் கருதப்படுவதுண்டு. அதே வேளையில், தாயின் கருமுட்டையில் தந்தையின் விந்தணுவை செலுத்தி அதனை வாடகைத் தாயின் கருப்பையில் பொறுத்து குழந்தை பெற்றுக்கொண்டால், அப்போது வாடகைத் தாய் உயிரியல் தாயாக முடியாது. ஏனெனில் கருமுட்டை மற்றும் விந்தணு இரண்டுமே சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் பெறப்பட்டது. ஆதலால் இந்த முறையில் வாடகைத் தாய்க்கும் குழந்தைக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது.
மற்ற கர்ப்பங்களைப் போலவே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் போதும் சில மருத்துவ அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. சமீப காலமாகவே இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக நடிகைகள் தங்கள் அழகு போய்விடக்கூடாது என்பதற்காக இந்தமுறையை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... நயனும் - நானும் அம்மா & அப்பா ஆகிட்டோம்..! இரட்டை குழந்தைகள் புகைப்படத்துடன் குட் நியூஸ் சொன்ன விக்னேஷ் சிவன்!