ஆம்பளைக்கு தான் ருசியா சமைக்கனும்.. பொம்பளைக்கு தயிர்சாதமே போதும்னு சொன்னாங்க - சுஹாசினி பகிர்ந்த ஷாக் சம்பவம்
இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியும், பிரபல நடிகையுமான சுஹாசினி தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அடக்குமுறை பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்.
1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் சுஹாசினி. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சுஹாசினி, கடந்த 1988-ம் ஆண்டு இயக்குனர் மணிரத்னத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு நந்தன் என்கிற மகனும் உள்ளார். சுஹாசினி நடிகையாக மட்டுமின்றி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். இவர் கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த இந்திரா என்கிற திரைப்படத்தை இயக்கினார்.
தற்போதும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சுஹாசினி, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தன் வீட்டில் சமையல்கார பெண்ணுடன் நடந்த கலந்துரையாடல் குறித்து விவரித்தார். அதில் அவர் கூறியதாவது : “எனக்கு மணிரத்னத்திற்கும் திருமணம் முடிந்ததும் நாங்கள் கூட்டுக் குடும்பத்தில் தான் வாழ்ந்து வந்தோம். பின்னர் மணிரதனத்தின் அண்ணன் தனியாக சென்றுவிட்டதால், நான் எனது கணவர் மற்றும் மகனுடன் தான் அங்கு வசித்து வருகிறோம்.
இதையும் படியுங்கள்... இந்தியன் 2 படப்பிடிப்பில் பரிதாபமாக பறிபோன 3 உயிர்கள்... சென்டிமெண்ட் பார்த்து ஷூட்டிங்கை கேன்சல் செய்த ஷங்கர்
எங்கள் வீட்டில் சமையல் செய்வதற்காக வயசான அம்மா ஒருவர் உள்ளார். நானும் அவரும் தான் வீட்டில் சேர்ந்து சமைப்போம். ஒருநாள் மணிரத்னம் வீட்டில் இல்லாத சமயத்தில், அந்த அம்மாவிடம், வாங்க நாம் சேர்ந்து டேஸ்டா ஏதாவது சமைத்து சாப்பிடலாம் என கேட்டேன். சப்பாத்தி குருமா, பருப்பு உசிலி செய்யலாம் என்று சொன்னேன். அதற்கு அவரோ அதெல்லாம் வேண்டாம் என்றார்.
அது வேண்டாம்னா அப்போ என்ன சாப்பிடுவது என கேட்டேன். அவர் உடனடியாக தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு தூங்கலாம் என சொன்னார். ஏன் என கேட்டேன், அதற்கு சார் தான் ஊர்ல இல்லையே அப்பறம் எதுக்கு ருசியா சமைக்க வேண்டும் என்று கேட்டார். சார் இல்லைனா நம்ம சாப்பிட வேண்டாமா என்றேன். அதற்கு அவர், சார் இருக்கும்போது அதெல்லாம் சமைக்கலாம், நாம் பொம்பளைங்க தானே நமக்கு தயிர் சாதமே போதும் என்று சொல்லி ஒரே நிமிடத்தில் என்னுடைய ஆசையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டார். பொம்பளைக்கு எதுக்கு வாய்க்கு ருசியா சாப்பாடு என்கிற டோனில அவர் பேசியதைக் கேட்டு அதிர்ந்துபோனேன்” என்று தான் சந்தித்த அடக்குமுறை பற்றி மனம் திறந்து பேசினார் சுஹாசினி.
இதையும் படியுங்கள்... செல்பி எடுக்க விடாததால் ஆத்திரம்... பிரபல பாடகர் மீது எம்.எல்.ஏ. மகன் தாக்குதல் நடத்திய ஷாக்கிங் வீடியோ இதோ