- Home
- Cinema
- Krishna : நான் அவன் இல்லை; கிருஷ்ணாவின் வாக்குமூலத்தால் போதைப்பொருள் வழக்கில் திடீர் ட்விஸ்ட்!
Krishna : நான் அவன் இல்லை; கிருஷ்ணாவின் வாக்குமூலத்தால் போதைப்பொருள் வழக்கில் திடீர் ட்விஸ்ட்!
போதைப் பொருள் வழக்கில் நேற்று போலீசார் முன் விசாரணைக்கு ஆஜரான நடிகர் கிருஷ்ணா, அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Actor Krishna Confession
போதைப்பொருள் வழக்கு கோலிவுட்டை அதிர வைத்துள்ளது. நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் சென்னையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை நீதிமன்ற காவலில் எடுத்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்ரீகாந்தை சிக்க வைத்த பிரதீப் என்பவர் நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வாக்குமூலம் அளித்திருந்தார். இதனால் கிருஷ்ணாவையும் விசாரணைக்கு ஆஜராகக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நடிகர் கிருஷ்ணா வாக்குமூலம்
விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று மாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார் கிருஷ்ணா. அப்போது அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும் நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடைய நெருங்கிய நண்பர் தான் என்பதை கிருஷ்ணா மறுக்கவில்லை.
போதைப்பொருள் பயன்படுத்தவில்லை - கிருஷ்ணா
தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று கிருஷ்ணா கூறியதற்கு முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறதாம். ஏனெனில் அவருக்கு இரைப்பை அலர்ஜி இருக்கிறதாம். அதுமட்டுமின்றி இதயத் துடிப்பு அதிகமாக இருப்பதனால் அதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டு வருவதாக கிருஷ்ணா கூறி உள்ளார். தான் பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக பிரதீப் கூறியது உண்மையில்லை என தெரிவித்துள்ள கிருஷ்ணா, பிரதீப் உடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தார். மேலும் நீங்கள் தேடும் கிருஷ்ணா நான் இல்லை என்றும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கிருஷ்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை
கிருஷ்ணாவின் வாக்குமூலத்தை அடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கடந்த 45 நாட்களில் அவர் போதைப்பொருள் எதுவும் உட்கொள்ளவில்லை என்பது உறுதியானதாக கூறப்படுகிறது. இருப்பினும் கிருஷ்ணாவிடம் விடிவிடிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போதைப்பொருள் பயன்படுத்தாவிட்டாலும் அதை விற்பனை செய்தாரா என்கிற கோணத்தில் விசாரணை செய்து வருகிறார்களாம். மேலும் கிருஷ்ணாவின் செல்போன் தரவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.