போதைப் பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த மற்றொரு நடிகரான கிருஷ்ணாவை தன்னிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Krishna Under Police Investigation in Drugs Case : தமிழ் திரையுலக வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது போதைப்பொருள் வழக்கு தான். இதில் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதை விசாரணையிலும் ஒப்புக்கொண்டார். மேலும் தன்னை போதைக்கு அடிமையாக்கியது பிரசாத் என்பவர் தான் என்றும், அவர் தன்னை வைத்து தீங்கிரை என்கிற திரைப்படத்தை தயாரித்ததாகவும், அப்போது அதில் நடித்ததற்கு தனக்கு தர வேண்டிய சம்பளத்துக்கு பதிலாக போதைப்பொருளை கொடுத்து தன்னை அதற்கு அடிமையாக்கியதாக வாக்குமூலம் அளித்திருந்தார் ஸ்ரீகாந்த்.

நடிகர் ஸ்ரீகாந்த் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கொக்கைன் பயன்படுத்தியதன் காரணமாக அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீகாந்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார் நீதிபதி. இதனால் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் ஸ்ரீகாந்த். இவரை போதைப் பொருள் வழக்கில் சிக்க வைத்த பிரதீப் என்பவர், நடிகர் கிருஷ்ணாவும் போதை பொருள் உட்கொண்டதை தன் கண்ணால் பார்த்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகக் கோரி நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

கிருஷ்ணாவிடம் போலீஸ் விசாரணை

சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாததால் கிருஷ்ணாவை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அவரின் போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால், அவரை மொத்தம் 5 தனிப்படைகள் அமைத்து தேடினர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணாவை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். இதையடுத்து ரகசிய இடத்தில் வைத்து நடிகர் கிருஷ்ணாவிடம் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். நடிகர் கிருஷ்ணா தமிழில் கழுகு என்கிற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தனின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். கிருஷ்ணாவுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நடிகர் கிருஷ்ணாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. அவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.