போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் தொடர்புடைய மற்றொரு நடிகரான கிருஷ்ணாவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Police Searching Actor Krishna in Drugs Case : போதைப்பொருள் வழக்கு தான் தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் ஸ்ரீகாந்த் இந்த வழக்கில் சிக்கி கைதான நிலையில், இதில் பலருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ள போலீசார், அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். ஸ்ரீகாந்தை சிக்க வைத்த பிரசாத் மற்றும் பிரதீப் ஆகியோர் நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருளை பயன்படுத்தியதாக வாக்குமூலம் அளித்திருந்தனர். இதனால் நடிகர் கிருஷ்ணாவும் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளார்.

ஸ்ரீகாந்த் சென்னையில் இருந்ததால் அவரை உடனடியாக வரவழைத்து விசாரித்து கைது செய்தனர். ஆனால் நடிகர் கிருஷ்ணா சென்னையில் இல்லாததால் அவரை விசாரணைக்கு ஆஜராக கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதுமட்டுமின்றி ஸ்ரீகாந்த் கைதானதை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தலைமறைவாக உள்ள நடிகர் கிருஷ்ணாவை தற்போது போலீசார் வலைவீசி தேடி வருகிறார்களாம். அவரைப்பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளதாம்.

நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க தனிப்படை

நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தற்போது கேரளா விரைந்துள்ளார்களாம். நடிகர் கிருஷ்ணா கேரளாவில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். ஸ்ரீகாந்தை தொடர்ந்து மற்றொரு நடிகரும் இந்த வழக்கில் வலைவீசி தேடப்படுவதால் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த வழக்கில் நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், அடுத்தடுத்து பல்வேறு பிரபலங்களும் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் கிருஷ்ணா தமிழில் கழுகு திரைப்படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தனின் உடன்பிறந்த சகோதரர் ஆவார். நடிகர் கிருஷ்ணாவுக்கு இந்த மாதம் தான் இரண்டாம் திருமணம் நடந்தது. அவரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், அண்மையில் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட கிருஷ்ணா தற்போது போதைப்பொருள் வழக்கில் சிக்கி உள்ளதால், அவரும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.