பாலியல் தொந்தரவு குறித்து தற்போது பெண்கள் வெளிப்படையாக பேசி வருவது ஆரோக்கியமான விஷயம் என நடிகை ஜனனி ஐயர் கூறிய நிலையில், அதே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் தாடி பாலாஜி, மீடூ புகார் கூறும் பெண்கள் தங்களை அசிங்கப்படுத்திக் கொள்கின்றனர் என்று கூறியுள்ளார். ஒரே செய்தியாளர் சந்திப்பின்போது, ஜனனியும், தாடி பாலாஜியும் இருவேறு கருத்துக்களைக் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நடிகை ஜனனி ஐயர், நடிகர் தாடி பாலாஜி கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஜனனி ஐயர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சினிமா துறை மட்டுமல்லாமல் அனைத்து துறையிலும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக கூறினார். சினிமா துறை என்பதால் இந்த விவகாரம் பெரிதாக பேசப்படுகிறது என்றும் ஜனனி கூறினார். எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாலியல் தொந்தரவுக்கு ஆளானவர்கள், 6 மாதம் ஒரு வருடம் கழித்து பேசுவதைவிட உடனடியாக பேச வேண்டும் என்றார்.

அதே செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் தாடி பாலாஜி, மீடூ விவகாரத்தில் குற்றம் சாட்டும் பெண்கள் தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்களா? அல்லது மற்றவர்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்களா? என்பது தெரியவில்லை என்றார். ஆனால், இதில் உடன்பாடு இல்லை எனவும் புகார் கூறும் பெண்கள் தங்களையே அசிங்கப்படுத்திக் கொள்வதாகவும், குடும்பத்தினரை அசிங்கப்படுத்திக் கொள்வதாகவும் தாடி பாலாஜி கூறினார்.