புதுவை திருமுடி சேதுராமன் நகரை சேர்ந்தவர் மஞ்சுநாத் .  தொழில் அதிபரான  இவர், புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பியூட்டி பார்லருக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது பியூட்டி பார்லர் உரிமையாளர் தட்டாஞ்சாவடி வீமன் நகரை சேர்ந்த உதயகுமாருடன் மஞ்சுநாத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று உதயகுமார் செல்போனில் பேசி மஞ்சுநாத்தை முதலியார் பேட்டையில் ஒரு பியூட்டி பார்லர் தொடங்கி இருப்பதாகவும், அங்கு வருமாறு அழைத்தார். அங்கு மஞ்சுநாத் சென்ற போது அவரை உதயகுமார் ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றார்.

அங்கு மஞ்சுநாத்தை உதயகுமார் மற்றும் ஒரு பெண் உள்பட 3 பேர் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்தனர். மேலும் மஞ்சுநாத்திடம் இருந்த செல்போனை பறித்த அவர்கள் அந்த செல்போன் மூலம் மஞ்சுநாத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்தை தங்களது வங்கி கணக்குக்கு மாற்றிக் கொண்டனர்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த மஞ்சுநாத் சிகிச்சை பெற்று பின்னர் உறவினர் உதவியுடன் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

உதயகுமார், அவரது மனைவி பிரேமா, நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து சேலத்தில் பதுங்கி இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாயின.

உதயகுமார் நடத்தி வந்த பியூட்டி பார்லரை அவரது மனைவி பிரேமா கவனித்து வந்தார். மஞ்சுநாத் அடிக்கடி இந்த பியூட்டி பார்லருக்கு வருவது வழக்கம். அப்போது பிரேமாவை மஞ்சுநாத்துடன் பழக விட்டார். பின்னர் இருவரும்  அடிக்கடி உல்லாசமாக இருக்கத் தொடங்கினர். 

அதை உதயகுமார் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார்..இந்த ஆபாச படத்தை காட்டி மஞ்சுநாத்திடம் உதயகுமார் பணம் பறிக்க முயற்சித்தார். இதற்காகத்தான் அவரை முதலியார்பேட்டை வீட்டுக்கு வரவழைத்தார்.பணம் தரவில்லை என்றால் ஆபாச படத்தை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார். 

ஆனாலும், மஞ்சுநாத் பணத்தை கொடுக்கவில்லை.எனவே, அவரை தாக்கி மொபைல் போன் ஆப் மூலம் ரூ.5 லட்சத்தை 2 வங்கிகளில் இருந்த தங்கள் கணக்குக்கு மாற்றினார்கள்.கைதான 3 பேரிடமும் போலீஸ் தொடர்ந்து விசாரித்து வருகிறது.