எலான் மஸ்க் இந்திய வருகை தள்ளி வைப்பு: இதுதான் காரணம்!
உலகின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்கின் இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவமனமாக உள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட அவரது நிறுவனத்தை இந்தியாவில் அமைக்க எலான் மஸ்க் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
ஆனால், இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் அதிகமாக இருப்பதாக எலான் மஸ்க் அதிருப்தியில் இருந்தார். டெஸ்லா நிறுவனம் கோரியுள்ள இறக்குமதி வரி குறைப்பு கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. தொடர்ந்து, எலெக்ட்ரிக் கார்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்குமாறு எலான் மஸ்க் வலியுறுத்தி வந்தார். அதேசமயம், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை தங்களது மாநிலத்தில் அமைக்குமாறு தமிழ்நாடு, தெலங்கானா, மேற்குவங்கம் ஆகிய மாநில அரசுகள் அழைப்பு விடுத்தன.
இதனிடையே, இந்திய அரசு மின்வாகனங்களுக்கு குறைந்த இறக்குமதி வரிகளை வழங்கும் புதிய மின்வாகன கொள்கையை அறிவித்தது. அதில், குறைந்தபட்சம் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் இந்தியாவில் மின்வாகன உற்பத்தி அலைகளைத் திறக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியில் சலுகை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு டெஸ்லா நிறுவனத்துக்கு உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும், டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி மையத்தை 2 - 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியாவில் தொடங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்தபோது பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது, 2024-ம் ஆண்டில் தான் இந்தியா வருவதாக எலான் மஸ்க் பிரதமர் மோடியிடம் தெரிவித்திருந்தார்.
காவி நிறம்: லோகோ சர்ச்சைக்கு தூர்தர்ஷன் விளக்கம்!
அதன் தொடர்ச்சியாக, உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைவரும், எக்ஸ்(முன்பு ட்விட்டர்) நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளில் இந்தியா வருவதாக இருந்தது. இந்த பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார். “இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பைஎதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பிரதமருடனான சந்திப்பின்போது, இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை அமைப்பது குறித்தும், அதிவேக இணைய இனைப்பான ஸ்டார்லிங்க் சேவை அறிமுகம் செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், எலான் மஸ்கின் இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், “துரதிர்ஷ்டவசமாக, டெஸ்லா நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக எனது இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்திய பயணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.