காவி நிறம்: லோகோ சர்ச்சைக்கு தூர்தர்ஷன் விளக்கம்!
காவி நிற லோகோ சர்ச்சைக்கு மத்திய அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் விளக்கம் அளித்துள்ளது
மத்திய அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் நிறுவனத்தின் சேனல்கள் அண்மையில் புதுப்பொழிவு பெற்றன. அதன் தொடர்ச்சியாக, அந்நிறுவனத்தின் ஒரு அங்கமான டிடி நியூஸ் சேனலின் லோகோ சிவப்பு வண்ணத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷனின் இலச்சினையின் நீல நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது பாஜக அரசின் காவிமயமாக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. தேர்தலில் வாக்குகளை கவரவும், அரசு நிறுவனங்களை கைப்பற்றவும் பாஜக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் நேரத்தில், நம்முடைய தூர்தர்ஷன் லோகோவின் நிறம் மாற்றபபட்டிருப்பது அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக தெரிவித்த மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த நடவடிக்கை தார்மீகமற்றது, சட்டவிரோதமானது. இதன்மூலம், தேசிய அளவிலான பொது ஒளிபரப்பு நிறுவனம் (தூர்தர்ஷன்), பாஜகவுக்கு ஆதரவானதாக ஒருதலைபட்சமாக மாற்றப்படுவதை மேற்கண்ட நடவடிக்கை உரக்கச் சொல்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
எதிரி நாடுகளே மதிக்கும்போது... மாநில அரசுகள் ஆளுநர்களை ஏன் மதிக்கவில்லை? பிரதமர் மோடி கேள்வி
மேலும், மக்கள் தேர்தல் மீது கவனம் செலுத்தி வரும் சூழலில், இத்தகைய கொடூர காவிமயமாக்கலை, தேர்தல் நடத்தை விதிமீறலை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? எனவும் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். பிரசார் பாரதியின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலரான ஜவஹர் சிர்காரும் லோகோ வண்ணம் மாற்றப்பட்டது வேதனையளிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காவி நிற லோகோ சர்ச்சைக்கு மத்திய அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அலுவலர் கவுரவ் திவேதி, தூர்தர்ஷன் லோகோவின் வண்ணத்தை பாஜகவுடன் தொடர்பு படுத்தி பேசுவது தவறானது என்றும், அது காவி நிறமல்ல, ஆரஞ்சு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.