மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். அந்த பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்து பல ஆண்டுகளாக தொழில் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அப்துல்ரஹீம் கோழி விற்பனை செய்ய கடையை திறந்து வைத்திருந்ததாகவும் அவரிடம் இறைச்சி வாங்குவதற்காக ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் அந்த வழியாக ஊரடங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர் ரோந்து சென்றுள்ளனர். அப்போது இறைச்சி கடையை மூட சொல்லியும் அங்கு திரண்டு இருந்தவர்களை கலைந்து போகுமாறு காவலர்கள் எச்சரித்துள்ளனர். உடனே அஅப்துல் ரகுமானின் உறவினர் ஒருவர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே காவலர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அப்துல்ரஹீம் காவலர்களை தடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் இன்று அவர் மரணமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் இருந்தவர்களிடம் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.