தெலுங்கானாவில் தேசிய நெடுஞ்சாலை நடுவே வாகன ஓட்டிகள் முன்னிலையில் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ருத்ராரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஒருவர் அரிவாளுடன் ஓடி வந்துள்ளார். இதை கண்ட அந்த நபர் சாலையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடியுள்ளார். ஆனால் அவரை விடாமல் துரத்தி சென்று கொடூரமாக சாலையின் நடுவே வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதனையடுத்து, கொலை செய்த நபர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். இதை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். சிலர் அவரது செல்போன்களில் படம்பிடித்துள்ளனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவர் போலக்பூரை சேர்ந்த மகபூப் என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கெனவே பல கொலை, கொள்ளை வழக்குகள் உள்ள நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், முன்விரோதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.