நிர்மலா தேவிக்கு சிறையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுகிறது. துப்பாக்கியை காட்டி, அவரை சித்திரவதை செய்வதாகவும் நிர்மலா தேவியின் வக்கீல் பசும்பொன் பாண்டியன் கோர்ட்டில் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். 

கடந்த மார்ச் 14ம் தேதி 4 கல்லூரி மாணவிகளை சில பெரிய மனிதர்களுக்கு பாலியல் ரீதியாக படுக்கைக்கு அனுப்ப வற்புறுத்தி தொலைபேசியில் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் 4 மாணவிகள் புகார் அளித்தனர். 

இதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் பேராசிரியை நிர்மலா தேவியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது.  மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் கூட கிடைக்காமல் தடுத்து வருவதாக காவல்துறை மற்றும் அரசுத் தரப்பு மீது புகார்கள் குவிந்து வருகின்றன. இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையும் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு சிறையில் பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார் அவரது வக்கீல் பசும்பொன் பாண்டியன். 

இதுகுறித்து நிர்மலா தேவி வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது; நிர்மலாதேவி சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பாலியல் தொல்லை தொல்லைகள் நிர்மலா தேவி அனுபவித்து வருகிறார் .அவருக்கு இதுபோல நடப்பது இது முதல் முறையல்ல. தொடர்ந்து நடக்கிறது. 

கடந்த முறை நிர்மலா தேவி பேட்டி கொடுத்து அழைத்து சென்ற போது காவல்துறையால் கடுமையாக தாக்கபட்டுள்ளார். அதுமட்டுமல்ல, துப்பாக்கியை கொண்டு சுட்டு விடுவதாக நிர்மலாதேவியை காவல் துறையினர் மிரட்டியுள்ளனர். பேராசிரியை நிர்மலாதேவி கடுமையான தாக்குதலால் பலத்த காயமடைந்து உள்ளார். காயம் வெளியில் தெரிந்துவிடும் என்பதனால் இன்றும் நிர்மலா தேவியை காவல் துறையினர் அழைத்து வரவில்லை.  மேலும், நிர்மலா தேவி சித்திரவதை செய்யப்படுவது குறித்து மனித உரிமை ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.