சென்னை அருகே உள்ள மேற்கு தாம்பரத்தில் இருக்கும் சாய்ராம் கல்லூரியில் உள்ள பிரமாண்ட ஆடிட்டோரியத்தில் சர்கார் ஆடியோ வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விஜய், சன் குழும தலைவர் கலாநிதிமாறன், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் முருகதாஸ், நடிகர் ராதாரவி, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  
தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான ரசிகர்களும் இசை வெளியீட்டு விழாவை காண வந்திருந்தனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினியும் கலந்து கொள்வார் என்று நேற்று காலையில் தகவல் வெளியானது. ஏனென்றால் ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஒரு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வரும் நடிகர் அந்த நிறுவனம் தயாரித்துள்ள மற்றொரு படத்தில் விழாக்களில் பங்கேற்பது வழக்கமான ஒன்று.


   
எனவே தான் சர்கார் ஆடியோ விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என்று தகவல் வெளியானதை பல்வேறு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. ரஜினி பங்கேற்பார் என்கிற தகவலே சன் டி.வி தரப்பில் இருந்து தான் லீக்கானதாக கூறப்படுகிறது. ஆனால் ரஜினி சர்கார் ஆடியோ விழாவில் பங்கேற்பதாக எந்த உறுதியும் சன் குழுமத்திடம் அளிக்கவில்லையாம். கலாநிதி மாறன் ஒரு பார்மாலிட்டிக்காக ரஜினியை விழாவுக்கு வருமாறு அழைத்ததாக சொல்லப்படுகிறது.


   
ஆனால் ரஜினி இந்த விழாவில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. சன் குழுமமும் விழாவுக்கு ரஜினியை அழைத்து வர வேண்டும் என்று முயற்சிக்கவில்லை. மேலும் ரஜினியின் பி.ஆர்.ஓவும் உடனடியாக ரஜினி சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்பார் என்று வெளியான தகவலை உடனடியாக மறுத்துவிட்டார். எனவே ரஜினி வருவதாக சன் டி.வி தரப்பில் ஆர்வக்கோளாறில் யாரோ உருவாக்கி வதந்தி தான் தீயாக பரவிவிட்டது.