சென்சார் போர்டில் லஞ்சம் வாங்குவதாக விஷால் கூறிய குற்றச்சாட்டு! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு!
மும்பை சென்சார் போர்டில் லஞ்சம் கேட்பதாக நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை நேற்று முன் வைத்த நிலையில், இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. டெலிபோனை வைத்து டைம் டிராவல் செய்யும் வித்தியாசமான கதைகளத்தில், காமெடி, காதல், கேங்ஸ்டர் காட்சிகள், என விறுவிறுப்பான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. நடிகர் விஷால் கதாநாயகனாக இந்த படத்தில் நடித்திருந்தாலும், எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் தான் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் விஷால் இருவருமே டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தனர். ரித்து வர்மா ஹீரோயினாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன், சுனில், அபிநயா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதோடு 100 கோடி வசூல் கிளப்பிலும் இப்படம் இணைந்துள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர், விஷால் நடிப்பில் வெளியான இந்த படம் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகும் நிலையில், நேற்று நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்தார். அந்த பதிவில் கூறி இருந்தாவது... "வெள்ளித்திரையில் ஊழல் காட்டப்படுவது பரவாயில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் ஊழலை ஜீரணித்துக் கொள்ள முடியாது. குறிப்பாக. அரசு அலுவலகங்களில் CBFC மும்பை அலுவலகத்தில் இதுபோன்ற ஊழல்கள் மிகவும் மோசமாக நடந்து வருகிறது. மார்க் ஆண்டனி ஹிந்தி வெளியீட்டுக்கு 6.5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது. இரண்டு பரிவர்த்தனைகள் மூலம் இதனை அனுப்பியதாகவும், திரைப்படம் திரையிடலுக்கு மூன்று லட்சமும் சான்றிதழுக்கு 3.5 லட்சமும் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
Prabhu Deva: பிரபுதேவா நடிக்கும் 'முசாசி'படக்குழுவினர் இலங்கை பிரதமருடன் திடீர் சந்திப்பு!
மேலும் எனது கேரியரில் இந்த நிலையை நான் சந்தித்ததில்லை. மேனகா என்ற இடைத்தரகர் மூலம் பணம் அளிக்கப்பட்டதாக விஷால் தெரிவித்திருந்தார். இதனை மகாராஷ்டிராவின் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் எனது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் இதை செய்வது எனக்காக அல்ல, எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக. நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போவதா? இதற்கான ஆதாரமாக யாருக்கு பணம் அனுப்பப்பட்டது, என்கிற தகவல்களையும் நடிகர் விஷால் பகிர்ந்திருந்தார்.
இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மத்திய அரசு விஷாலின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து, "தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் சிபிஎப்சி ஊழல் குறித்து நடிகர் விஷாலால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு துரதிருஷ்டவசமானது. ஊழலை அரசு பொறுத்துக் கொள்ளாது, இதில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி இன்று விசாரணை நடத்த மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.