விஜய் டிவி நடிகர் புகழ் கதாநாயகனாக நடித்துள்ள ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
விஜய் டிவி புகழ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் புகழ். சினிமா வாய்ப்புத் தேடி சென்னைக்கு வந்த இவர், ஆரம்பத்தில் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’, ‘அது இது எது’ நிகழ்ச்சியில் வரும் சிரிச்சா போச்சு ஆகியவற்றில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையை கொடுத்தது. இதன் மூலம் அவர் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
புகழ் நடித்துள்ள படங்கள்
சசிகுமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அயோத்தி’ திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கௌதம் கார்த்திக்கின் ‘1947’ படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தொடர்ந்து ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை ‘வேலை’, ‘என்னவளே’, ‘ஜூனியர் சீனியர்’ ஆகிய படங்களை இயக்கிய ஜே சுரேஷ் இயக்கியிருக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தின் டிரெய்லர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஆனால் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டு சென்றது. இந்த படத்தில் அனிமேஷன் பயன்படுத்தாமல் உண்மையான புலியை நடிக்க வைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். எனவே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்படாமல் இருந்ததால், புகழின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். இந்த நிலையில் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம் வருகிற 27-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புகழுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
