நடிகர் விஜய் ஆன்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கொலைகாரன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.  விஜய் ஆண்டனியின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் 'தமிழரசன்' படத்தின் மீது தீவிரம் காட்ட துவங்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. விஜய் ஆண்டனி போலீசாக நடித்துள்ள 'தமிழரசன்' திரைப்படம் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். 

இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று மயிலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் பூஜையுடன் ஆரம்பமானது.  இந்த படத்தில் சுரேஷ்கோபி, சோனு சூட், யோகி பாபு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் பத்து வருடங்களுக்குப் பின் கே.ஜே.யேசுதாஸ், இளையராஜாவின் இசையில் பாடியுள்ளார்.

கடைசியாக இவர்கள் 2009 ஆம் ஆண்டு வெளியான, வரலாற்றுத் திரைப்படமான 'பழசிராஜா' படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழரசன் படத்தை SNS ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் கௌசல்யா ராணி என்பவர் தயாரித்துள்ளார். ஆதி ராஜசேகர் படத்தொகுப்பு செய்துள்ளார்.  அனல் அரசு சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். மேலும் இந்த படம் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.