கேப்டன் மில்லர் படத்தை பார்த்து மெர்சலான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - அவரின் விமர்சனம் இதோ
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், படக்குழுவை பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசை அசுரன் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் விருந்தாக நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது.
இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில் நேற்று தனுஷை நேரில் சந்தித்த தயாரிப்பாளர் தியாகராஜன் மாலை அணிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். அதேபோல் பொங்கல் ரேஸில் தனக்கு போட்டியாக ரிலீஸ் ஆன படங்களை அடிச்சு துவம்சம் செய்து வசூலிலும் கேப்டன் மில்லர் திரைப்படம் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது.
இதையும் படியுங்கள்... சவால் விட்ட கார்த்திக்... அவமானப்பட்டு வெளியேறிய சிதம்பரம் - கார்த்திகை தீபம் சீரியலில் செம்ம டுவிஸ்ட்
இந்த நிலையில், கேப்டன் மில்லர் படத்துக்கு பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் நடிகரும், தமிழகத்தின் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கேப்டன் மில்லர் படம் பார்த்து தன் விமர்சனத்தை பதிவிட்டுள்ளதோடு, படக்குழுவை தன்னுடைய எக்ஸ் தளத்தில் மனதார பாராட்டியும் உள்ளார்.
அதில், “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், நடிகர் ஷிவ ராஜ்குமார், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இசை அமைப்பாளர் சகோதரர் ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகை பிரியங்கா மோகன், சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” என பாராட்டி பதிவிட்டுள்ளார். இதற்கு நடிகர் தனுஷ் நன்றியும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... கத்தியுடன் கபடி போட்டியில் இறங்கிய ரவுடிகள்... தப்பித்தாரா ஷண்முகம்? அண்ணா சீரியலில் எதிர்பாரா திருப்பம்