தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நடத்தும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் நடிகர் விஜய் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.
Vijay's advice to students: "Is NEET the only exam in the world?" - Speech that goes viral! : தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் கல்வி விருது விழாவில் அக்கட்சி தலைவர் விஜய் பேசியதாவது : “படிப்புல சாதிக்கனும், படிப்பும் சாதனை தான், அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதற்காக ஒரே ஒரு படிப்பில் மட்டும் நம்ம சாதித்தே ஆக வேண்டும் என நினைப்பது சாதனை கிடையாது. ஒரே விஷயத்தை பற்றி திரும்ப திரும்ப யோசிக்காதீங்க. அவ்ளோ மன அழுத்தம் ஆக வேண்டிய அவசியமில்லை. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நீட் மட்டும் தான் உலகமா... நீட்டை தாண்டி இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெருசு. அதுல நீங்க சாதிக்க வேண்டியது பல விஷயங்கள் இருக்கு. அதனால் இப்போவே உங்கள் மனதை பலமாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஓட்டுக்கு காசு வாங்காதீங்க
ஜனநாயகம் என்று ஒன்னு இருந்தா தான் இந்த உலகமும் சரி, இந்த உலகத்தில் உள்ள எல்லா துறையும் சுதந்திரமாக இருக்க முடியும். முறையான ஜனநாயகம் இருந்தால் போதும் எல்லாருக்கும் எல்லாமும் சரிசமமா கிடைக்கும். அதன் முதல் படியாக, உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சொல்லுங்கள், அவரவர்களின் ஜனநாயக கடமையை ஒழுங்கா செய்ய சொல்லுங்க.
ஜனநாயக கடமையை செய்யுறது பெரிய விஷயமல்ல... சாதாரணமான விஷயம் தான். நல்லவங்க, நம்பிக்கையானவங்க, இதுவரைக்கும் ஊழலே செய்யாதவங்க, யாருன்னு பார்த்து தேர்ந்தெடுக்க சொல்லுங்க. 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு விழாவில், நான் சொல்லும்போது, காசு கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயிச்சிடலாம்னு நினைக்குறாங்கல்ல. அந்த கலாச்சாரத்தை யாரும் ஊக்குவிக்காதீர்கள். யாரும் காசு வாங்காதீங்க. உங்க பெற்றோரிடமும் எடுத்து சொல்லுங்கனு சொல்லிருந்தேன். அதை நீங்களும் அப்படியே பாலோ பண்ணுங்க.
2026 தேர்தலில் வண்டி, வண்டியா வந்து கொட்டப்போறாங்க
நீங்க வேணா பாருங்க, அடுத்த வருஷம் வண்டி, வண்டியா வந்து கொட்டப்போறாங்க. அது அத்தனையும் உங்ககிட்ட இருந்து கொள்ளையடிச்ச பணம் தான். என்ன பண்ணனும்னு உங்களுக்கு கரெக்டா தெரியும். அது நான் சொல்லி தான் புரிய வைக்கனும்னு அவசியமில்ல. பெற்றோர்களிடம் ஒரு சின்ன வேண்டுகோள், உங்க குழந்தைகளோட விஷயத்தில் அவர்களை எதிலும் அழுத்தம் கொடுக்காதீர்கள். அவங்களுக்கு என்ன பிடிச்சிருக்குனு தெரிஞ்சுகிட்டு அதற்கு ஏற்ற மாதிரி வழிநடத்துங்க.

எத்தனை தடைகள் வந்தாலும், அவரரவர்களுக்கு பிடித்த விஷயத்திலோ, பிடித்த துறையிலோ எல்லாரும் கண்டிப்பா சாதிச்சு காட்டுவாங்க. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சாதி, மதத்தை வைத்து பிரிவினை ஏற்படுத்தும் சிந்தனை பக்கம் சென்றுவிடாதீர்கள். விவசாயிகள் என்ன சாதி மதம் பார்த்தா பொருளை விளைய வைக்கிறார்கள். தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்த பொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். இவ்வளவு ஏன் இயற்கை அம்சங்களான வெயில், மழையில் சாதி இருக்கா... மதம் இருக்கா. போதை பொருட்களை எப்படி ஒதுக்கி வைக்கிறீர்களோ, அதே போல் சாதி, மதத்தையும் தூரமா ஒதுக்கி வச்சிடுங்க. அதுதான் நம்ம எல்லாருக்குமே நல்லது.
பெரியாருக்கே சாதி சாயம் பூச முயல்கிறார்கள்
சமீப காலமாக தந்தை பெரியாருக்கே சாதி சாயம் பூச முயல்கிறார்கள். ஒன்றிய சிவில் சர்வீஸ் தேர்வில் கூட சாதி சாயம் பூசுகிற மாதிரி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த உலகத்தில் எது சரி... எது தவறு என்பதை பகுப்பாய்வு செய்து பார்த்தாலே போதும், ஒரு குழப்பம் இல்லாத தெளிவான வாழ்க்கை வாழலாம். டெக்னிக்கல் மற்றும் அறிவியல் பூர்வமாக சிந்தியுங்கள். ஏற்கனவே வந்துவிட்ட ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை எதிர்கொள்வதற்கு அதுதான் ஒரே வழி. ‘எவ்ளவோ பண்ணிட்டோம்... இத பண்ணமாட்டோமா’ என்கிற பாசிடிவ் அப்ரோச் ஓடவே செல்லுங்கள். தைரியமா இருங்க, நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என்று விஜய் பேசினார்.
