தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் மேடையில் உரை நிகழ்த்தாமல் நேரடியாக பரிசுகளை வழங்கினார்.

TVK Education Awards Phase 2 Today – Vijay Leads the Celebrations : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். அக்கட்சி சார்பில் கல்வி விருது விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்தது. அதில் அரசு பொதுத்தேர்வில் பத்து மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை தொகுதிவாரியாக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தன் கையால் கல்வி ஊக்கத்தொகை வழங்கி அவர்களை கெளரவித்து வருகிறார் விஜய்.

அந்த வகையில் கல்வி விருது விழா மூன்றாவது ஆண்டாக இந்த வருடமும் நடைபெற்றது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஷெர்டன் ஓட்டலில் இந்த விருது விழா மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தவெக கல்வி விருது விழா முதல்கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அதில் 88 தொகுதிகளை சேர்ந்த சுமார் 600 மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருதுகளை வழங்கினார் விஜய். அதுமட்டுமின்றி அவர்களுடன் மேடையில் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

தவெக-வின் 2ம் கட்ட கல்வி விருது விழா

இந்நிலையில், இரண்டாம் கட்ட கல்வி விருது விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் தஞ்சாவூர், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்பட மொத்தம் 18 மாவட்டங்களில் 75 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு காலை உணவுகளும் பரிமாறப்பட்டன. இதையடுத்து காலை 10 மணியளவில் விழா நடைபெறும் இடத்துக்கு வந்த விஜய், நேரடியாக மேடைக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கத் தொடங்கினார்.

நடிகர் விஜய் முதல் கட்ட கல்வி விருது விழாவில் மேடைக்கு வந்ததும் மாணவர்களுடன் உரையாடிவிட்டு தான் பரிசுகளை வழங்கத் தொடங்கினார். ஆனால் இம்முறை இரண்டாம் கட்ட விழாவில் அவர் எந்தவித உரையும் நிகழ்த்தவில்லை. நேரடியாக மேடைக்கு வந்து பரிசுகளை வழங்கத் தொடங்கிவிட்டார். அவர் முதல் கட்ட விழாவில் பேசும்போதே, இந்த உரையை தான் அடுத்த இரண்டு கட்ட விழாக்களுக்கும் பேசியதாக எடுத்துக் கொள்ளுங்கள் என கூறி இருந்தார். அதனால் தான் இன்று உரை நிகழ்த்தாமல் பரிசுகளை வழங்கத்தொடங்கினார். அடுத்தகட்ட விழாவிலும் விஜய் உரை நிகழ்த்த மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.