நீட் ஒன்றே படிப்பு கிடையாது அதைத் தாண்டி உலகம் இருக்கிறது என்று தாவிக்க தலைவர் விஜய் இன்று மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பேசியிருந்தார் அது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.

விருது வழங்கும் விழாவில் நீட் குறித்து விஜய் பேச்சு 

2025-ம் ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருதுகள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், “நீட் என்பது மட்டுமே படிப்பு கிடையாது. அதைத் தாண்டி நிறைய படிப்புகள் இருக்கிறது. ஒரு படிப்பிற்காக நாம் எந்தவித மன அழுத்தத்திற்கும் ஆளாகக் கூடாது” என பேசி இருந்தார். இது தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. திமுகவினர் பலரும் விஜயின் கருத்துக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.

திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி கண்டம்

திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உங்களைப் போலச் சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை எனப் புரியப் போவதில்லை. நீட் மட்டும்தான் உலகம்னு இங்க யாரும் சொல்லல. நீட் தாண்டி மிகப்பெரிய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், நீட் என்ற பெயரில் எங்கள் பிள்ளைகள் தாங்கள் ஆசைப்படும் கல்வியை பெறுவதில் சமவாய்ப்பை மறுக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் அயோக்கியத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதை எதிர்த்துத்தான் தொடர்ந்து திராவிட மாடல் அரசு சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது.

சங்பரிவாரின் குரலாக விஜய் ஒலிக்கிறார் - ராஜீவ்காந்தி

கல்வியில் எங்கள் பிள்ளைகளுக்கான சமநீதி மறுக்கப்படும்வரை அதற்கு எதிரான எங்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். ஆனால், எல்லோரும் மருத்துவம் படிச்சா யாரு நோயாளியா இருப்பாங்கன்னு கேக்குற தற்குறி சீமானின் குரலாகவும், எல்லோரும் படிச்சா யாரு மத்த வேலைகளைப் பார்ப்பது என்ற சங் பரிவாரின் சிந்தனையாகவும் உங்கள் குரல் ஒலிக்கத் தொடங்கியிருப்பதன்மூலம் நீங்களும் அந்த அயோக்கியக் கூட்டத்தின் அங்கம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர் விஜய் அவர்களே. உங்களைப் போலச் சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை எனப் புரியப் போவதில்லை. உங்களின் தற்குறித்தனம் இன்னும் இன்னும் இந்த இளைய சமூகத்தின்முன் அம்பலப்படுவதைப் பார்க்கத்தான் போகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

விஜய்க்கு கேள்வி எழுப்பிய வைஷ்ணவி

சமீபத்தில் தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ள வைஷ்ணவி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு திரைப்படத்தின் முழு தாயாரிப்பிற்கே ரூ.30 கோடி செலவாகும் பொழுது, அவர்களின் ஊதியம் ரூ.250 கோடி என்பது திரைத்துறையின் உண்மை வெளிச்சம். ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், நடனம், உடை வடிவமைப்பாளர்கள், வாகன வசதி, துணை நடிகர்கள் என பல்வேறு தொழிலாளர்களின் உழைப்புதான் ஒரு திரைப்படத்தின் முதுகெலும்பு. ஆனால் இந்த ரூ.250 கோடிக்காக இவர்களின் ஊதியம் குறைக்கப்படுகிறது. இந்த அபத்தமான வித்தியாசம் திரைத்துறையில் உழைக்கும் சிறு தொழிலாளர்களின் சாபத்திற்கு உள்ளாக்குகிறது. அவர்களின் சாபத்தையும் மன குமுறலையும் போக்கவா இந்த கல்வி விருது விழா!? இன்று நடக்கும் இந்த கல்வி விருது விழா கடந்த மூன்றாண்டுகாளாக தானே நடக்கிறது. அதற்கு முன் உங்களுக்கு கல்வி முக்கியமாக தெரியவில்லையா!? உண்மையில் இந்த விழா கல்விக்கான விழாவா!? இல்லை மக்களை ஏமாற்றும் சினிமா பிரமோஷன் விழாவா!?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜயை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்

பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது பதிவில், “விஸ்வகர்மா மூலம் குலத்தொழில் ஊக்குவிக்கப்படுகிறது - பாஜக. ஆடு, மாடு மேய்ப்பதை அரசுத்தொழில் ஆக்குவேன் - ஶ்ரீமான். சாதாரண குடும்பத்தை சேர்ந்த உங்களுக்கு மருத்துவராகும் கனவு எதற்கு? வேறு படிப்பை படியுங்கள் என்பதன் polite version தான் விஜயின் இந்த பேச்சு” எனக் கூறியுள்ளார்.