மலையாளத் திரையுலகில் கடந்த 2012ஆம் ஆண்டு 'பிரபுவின்டே மக்கள்' என்கிற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான டோவினோ தாமஸ்,   இன்று வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். 

இதுவரை மலையாளத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.  மேலும் இவருடைய கவனம் தற்போது தமிழிலும் திரும்பியுள்ளது.  அந்த வகையில் 'அபியும் நானும்' படத்தில் கதாநாயகனாகவும், மாரி 2 படத்தில் அதிரடி வில்லனாகவும் நடித்து தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் கிட்டத்தட்ட இந்த வருடம் மட்டும் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் குணச்சித்திர வேடம், வில்லன் என விஜய் சேதுபதி பாணியில் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மேலும் குறும்படங்கள்,  ஆல்பம் பாடல்கள் போன்றவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார்.  இவர் கலவையான படங்களை தேர்வு செய்து நடித்தாலும், கதைக்கும்,  கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொண்ட கதைகள் மட்டுமே தேர்வு செய்கிறார். அந்த வகையில் சவுத் இந்தியன் இன்டெர்நேஷனல் விருது, ஆசியாவிஷன் விருது, ஏசியாநெட் விருது, போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவருடைய நடிப்பிற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, சிறந்த நடிகருக்கான சர்வதேச விருது இவருக்கு கிடைத்துள்ளது.  

இவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம்  'அண்ட் தி ஆஸ்கார் கோஸ் டூ' .  இந்த படத்தை இயக்குனர் சலீம் அகமது இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் சினிமா கனவுகளை துரத்தும் ஒரு இளைஞர் கதாபாத்திரத்தில், டோவினோ தாமஸ் நடித்துள்ளார்.  

இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில்,  சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் இப்படம் கலந்துகொண்டது. இந்தப்படத்தை பார்த்த விழா குழுவினர், டோவினோ தாமஸுக்கு சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதை கொடுத்துள்ளனர்.  அதுமட்டுமின்றி படம் சிறந்த இயக்குனர் மற்றும் குணச்சித்திர வேடம் உள்ளிட்ட பல்வேறு பட்டியல்களில் விருதை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.