ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸின் வாழ்நாள் சாதனைக்காக, அகாடமி அவருக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. அவர் வாங்கிய முதல் ஆஸ்கர் விருது இதுவாகும்.
Honorary Oscar for Tom Cruise : ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸுக்கு அகாடமி கௌரவ ஆஸ்கர் விருதை வழங்கியுள்ளது. டூப் இல்லாமல் சாகசக் காட்சிகளில் நடித்து உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏராளமான பாராட்டுக்களைப் பெற்றவர் டாம் குரூஸ். சினிமாவில் டாம் குரூஸின் வாழ்நாள் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக மூன்று முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அவருக்கு விருது கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கவர்னர்ஸ் விருது வழங்கும் விழாவில் டாம் குரூஸுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இயக்குநர் அலெஜான்ட்ரோ ஜி. இனாரிட்டு இந்த விருதை டாம் குரூஸுக்கு வழங்கினார். 'பார்ன் ஆன் தி ஃபோர்த் ஆஃப் ஜூலை', 'ஜெர்ரி மக்வைர்' ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான இரண்டு பரிந்துரைகளும், 'மேக்னோலியா' படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பரிந்துரையும் அவருக்கு முன்பு கிடைத்தது.

டாம் குரூஸுக்கு முதல் ஆஸ்கர் விருது
விருதைப் பெற்றுக்கொண்ட டாம் குரூஸ் பேசியதாவது: "சினிமா எனக்கு ஒரு தொழில் மட்டுமல்ல, அதுவே என் வாழ்க்கை. அதனால்தான் அது முக்கியமானது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சினிமா மீதான என் காதல் தொடங்கியது. நான் இருள் சூழ்ந்த ஒரு திரையரங்கில் ஒரு சிறுவனாக இருந்தேன். அறையின் நடுவே அந்த ஒளிக்கீற்று செல்வதை நான் நினைவுகூர்கிறேன். மேலே பார்த்தபோது, அது திரையில் வெடிப்பது போல் தோன்றியது. திடீரென்று, நான் அறிந்திருந்த உலகத்தை விட அந்த உலகம் மிகப் பெரியதாக மாறியது. முழு கலாச்சாரங்களும், வாழ்க்கைகளும், நிலப்பரப்புகளும் என் முன் விரிந்தன. அது என்னுள் ஒரு தீப்பொறியை உருவாக்கியது.
அது ஒரு சாகசத்திற்கான தாகமாக, அறிவிற்கான தாகமாக, மனிதநேயத்தைப் புரிந்துகொள்வதற்கான தாகமாக, கதாபாத்திரங்களை உருவாக்குவதற்கான தாகமாக, ஒரு கதையைச் சொல்வதற்கான தாகமாக, உலகைப் பார்ப்பதற்கான தாகமாக மாறியது. அது என் கண்களைத் திறந்தது. என் வாழ்க்கையில் நான் அப்போது கண்ட எல்லைகளுக்கு அப்பால் வாழ்க்கை விரிவடைய வாய்ப்புள்ளது என்ற என் கற்பனையை அது கட்டவிழ்த்துவிட்டது. அந்த ஒளிக்கீற்று உலகைத் திறக்க வேண்டும் என்ற ஆசையை என்னுள் ஏற்படுத்தியது, அதை நான் அன்று முதல் பின்தொடர்கிறேன்," என்று டாம் குரூஸ் கூறினார்.
