Kamalhaasan : உலக நாயகன் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார் ஒன்றை பிரபல தயாரிப்பு நிறுவனம் அளித்துள்ளது. அது குறித்த இந்த பதிவில் காணலாம்.
தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மிகச் சிறந்த நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வரும் ஒரு நபர் தான் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள். இந்நிலையில் அவர் மீது இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி நல்ல கதைகளம் இருந்தாலும், பெரிய அளவில் ஹிட் அடிக்காத ஒரு திரைப்படம் தான் உலக நாயகன் கமல்ஹாசனின் "உத்தம வில்லன்" திரைப்படம். இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் அவர்களோடு இணைந்து தயாரித்து வழங்கியது இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.
இந்நிலையில் அந்த படத்தினால் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் மீது புகார் ஒன்றை தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து உருவான திரைப்படம் தான் உத்தம வில்லன்.
இந்த திரைப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் மறைந்த இயக்குனர் பாலச்சந்தர் அவர்களும் நடித்திருப்பார். ஒரு முன்னணி ஹீரோவின் கதாபாத்திரத்தை ஏற்று உலக நாயகன் அவர்கள் நடித்திருப்பார், இந்த திரைப்படத்தில் தந்தை மற்றும் மகனிடையே நடக்கும் ஒரு பாச போராட்டத்தை ரமேஷ் அரவிந்த் மிக அழகாக கையாண்டு இருப்பார்.
இருப்பினும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் சாதனை படைக்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட கமல்ஹாசன் அவர்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு மற்றொரு திரைப்படம் நடித்து தருவதாக கூறி வாக்களித்து இருக்கிறார் என்றும், இருப்பினும் கடந்த 9 ஆண்டுகளாக கமல்ஹாசன் அவர்கள் திருப்தி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எந்த ஒரு திரைப்படத்தையும் ஒப்புக்கொள்ளாத நிலையில் தற்பொழுது அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே தயாரிப்பாளர் சங்கம் இதில் தலையிட்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஒரு படம் நடித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தங்களுக்கு விருப்பமான கதையில் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
