'தி நன்' திரைப்படம் உலகம் முழுவதும் 1400 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. 

2016ம் ஆண்டில் வெளிவந்த காஞ்சூரிங் படத்தின் இரண்டாம் பாகத்தில் வாலக் என்ற பேயை எட் மற்றும் லோரன் தம்பதி வீழ்த்துவர். இந்த வாலக் எப்படி வந்தது என்பதற்கு விடை அளிக்கும் திரைப்படம் தான் 'தி நன்'. 

இதில் 1952ஆம் ஆண்டில் ரோமானியா நாட்டிலுள்ள தேவாலயத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் கொல்லப்பட மற்றொருவர் தற்கொலை செய்துகொள்கிறார். இதை விசாரிக்க பாதிரியார் ஒருவரையும் கன்னியாஸ்திரி ஒருவரையும் திருச்சபை அனுப்பி வைக்கிறது. 

இதைத்தொடர்ந்து அங்கு செல்லும் இருவரும் அமானுஷ்ய சக்தியுடன் போராடுகின்றனர். இதை பதைபதைப்பு குறையாமல் இயக்குனர் கொரின் ஹார்டி காட்சிப்படுத்தி இருப்பார். ரசிகர்களை உறைய வைக்கும் காட்சிகள் இந்தப் படத்தில் ஏராளம். இந்த படத்திற்கு உலகம் முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்து விட்ட நிலையில் இப்படம் உலகம் முழுவதும் 1400 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. 

கொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த படம் தலா  33 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ரஷ்யாவிலும் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. அங்கும் 'தி நன்' திரைப்படம் சுமார் 34 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. காஞ்சூரிங் திரைப்பட வரிசையில் மற்ற பாகங்களை காட்டிலும் இந்தப் படத்திற்கு உலகமெங்கிலும் கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளதாகவே விமர்சகர்கள் கருதுகின்றனர். 

தொடர்ந்து திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் ஹாரர் வகை திரைப்படங்களின் முந்தைய சாதனைகளை தகர்க்கும் என்றே கருதப்படுகிறது.