Asianet News TamilAsianet News Tamil

தளபதி விஜய்யின் குரூர வில்லனின் ரியல் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் ட்விஸ்ட்: என்னா பேச்சு பேசுறார்யா!?

இன்னைக்கு வரைக்கும் சினிமாதான் எனக்கு சோறு போடுது. ஆனாலும் அதற்காக கண்ணெதிரில் நடக்கும் அநியாயங்களை பற்றி விமர்சனம் செய்யக் கூடாதா? 

The awesome face of Thalabathy Vijay's villain
Author
Chennai, First Published Feb 13, 2020, 7:18 PM IST

எம்.ஜி.ஆர். மேல் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அம்பூட்டு பாசம் வர முக்கிய காரணம்? நம்பியார்தான். அவரின் குரூரமான நடிப்பும், சதா சர்வகாலமும் அத்தனை படங்களிலும் எம்.ஜி.ஆர்-க்கு இம்சையை கொடுத்ததாலேயே மக்கள் திலகத்தின் மீது மக்களுக்கு தீராத ஆசை உருவானது. ஆனால் சினிமா உலகின் உள் விபரங்களை அறிந்த மனிதர்கள் சொல்வார்கள், ’யதார்த்த வாழ்க்கையில் எம்.ஜி.ஆரை விட நம்பியார் மிக நல்லவர்’ என்பார்கள். இதன் பின்னணி என்ன? என்று விஷமத்தனமாக ஆராய வேண்டிய அவசியம் இங்கே இல்லை. ஆனால் இது உண்மை. அந்த நம்பியார் மட்டுமில்லை, இந்திய சினிமாவில் மிக மோசமான வில்லன்களாக நடித்து, மக்களிடம் ‘அயோக்கியப் பையன் பா!’ என்று பெயரெடுத்த பலர், ரியல் வாழ்க்கையில் அதற்கு நேர் எதிரான குணங்கள் மற்றும் திறமைகளுடன் வாழ்ந்தவர்கள். அப்படிப்பட்ட வில்லன்களின் லிஸ்டில் இணைந்துள்ளார்  ‘பாக்ஸர்’ தீனா. வடசென்னை, தெறி, பிகில், அட்டு என்று பல படங்களில் செம்ம ரோல் பண்ணிய மனுஷன் இவர்.  குறிப்பாக விஜய்யின் வெறித்தனமான வில்லன். சென்னையின் பாஷையை சர்வசாதாரணமாக பேசியபடி இவர் செய்யும் அராத்துகள் களேபரமானவை. தெறி படத்தில், மெயின் ரோட்டில் பிச்சையெடுக்கும் குழந்தைகளுடன் அன்பாக பேசிய விஜய்யை இவர் மிரட்டும் ஸீனெல்லாம் அல்லு தெறித்தவை. 

The awesome face of Thalabathy Vijay's villain
அப்பேர்ப்பட்ட தீனாவுக்குள் மிகப்பெரிய இலக்கிய, சமத்துவ கருத்துக்களும், எண்ணங்களும் தீப்பிடித்து எரிகின்றன. சாதிய பிரச்னைகளுக்கு எதிராக இவர் பதிவிடும் கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் ஜோர்ராக வைரலாகின்றன. காசிமேட்டில் மிக சாதாரண வீட்டில் வாழும் இவருக்குள் மிகப்பெரிய கருத்துக் கோட்டை குடியிருக்கிறது. 
பிரபல அரசியல் வாரம் இருமுறை இதழுக்கு தான் கொடுத்திருக்கும் பேட்டியில் தீனா கொளுத்திப் போட்டிருக்கும் ஹைலைட் பாயிண்டுகள் இதோ....
*    நான் எந்த சாதி குறித்தும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதில்லை. அம்பேத்காரில் ஆரம்பித்து பெரியார், கக்கன், காமராஜர், முத்துராமலிங்கனார் என எல்லா தலைவர்களையும் எனக்குப் பிடிக்கும். 
*    அண்ணன் திருமாவளவன் மீட்டிங்கானாலும் சரி, அய்யா ராமதாஸ் மீட்டிங்கானாலும் சரி முன் வரிசையில் உட்கார்ந்து கேட்பேன். 
*    வரலாற்றைப் படித்தறியாமல், சாதி வெறி பிடித்து திரிகிற சாதிய மனநோயாளிகளாக இருப்பவர்களிடம் இருந்து என் போன்றோருக்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். எனக்கு அவங்க மேலே எந்த கோபமும் இல்லை. அவங்களும் என் சகோதரர்கள்தான். 
*    தாழ்த்தப்பட்டவன், பிற்ப்படுத்தப்பட்டவன், முற்ப்படுத்தப்பட்டவன்னு எந்த அடையாளத்துக்குள்ளும் என்னைய நீங்க அடக்க முடியாது. 
*    நான் வளர்ந்த சூழ்நிலையில், சாதின்னா என்னான்னே சொல்லித் தரப்பட்டதில்லை. ஆனால் நான் தீண்டாமைக் கொடுமைகளை நேரில் பார்த்திருக்கிறேன். சாதிய விஷத்துக்கு எதிரான என் எதிர்ப்புகளை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானேன். 
*    எல்லா சமூகங்களிலும் நல்லவர், கெட்டவர் உண்டு. யாரோ ஒருவர் செய்யும் குற்றத்துக்காக அவர் சார்ந்த ஒட்டுமொத்த சாதியையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது என்ன நியாயம்? 
*    ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அனைவரும் யோக்கியர்களா? சாதியின் பெயரால் பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருக்கும் சைக்கோக்களை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?
*    இதுபோன்ற கருத்துக்களைப் பேசுவதால், எழுதுவதால் எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் வருமா? என்று கேட்கலாம், இன்னைக்கு வரைக்கும் சினிமாதான் எனக்கு சோறு போடுது. ஆனாலும் அதற்காக கண்ணெதிரில் நடக்கும் அநியாயங்களை பற்றி விமர்சனம் செய்யக் கூடாதா? 
--------என்கிறார். 
நீங்க ஹீரோவா தெரியுறீங்க தீனா!

Follow Us:
Download App:
  • android
  • ios