Jana Nayagan Movie Making Video Released : இயக்குநர் ஹெச் வினோத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

Jana Nayagan Movie Making Video Released : தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு செல்வதாக அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியையும் தொடங்கி, அக்கட்சியின் இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் விஜய். தவெக-வின் முதல் மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியிலும், அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி மதுரையிலும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தவெக மாநாட்டை போல் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் பாபி தியோல், கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் அதைக் கொண்டாடித் தீர்க்க ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். ஜனநாயகன் திரைப்படம் அரசியல் கதையம்சத்துடன் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.

ஜனநாயகன் திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர உள்ளதாக ஏற்கனவே அறிவித்துவிட்டனர். அப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. விஜய்யின் மாநாட்டை போல் அவரின் ஜனநாயகன் பட ஆடியோ லாஞ்சுக்காகவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அந்த பிரம்மாண்ட விழா வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் சென்னையில் அல்ல, அந்த விழாவை மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தான் இதுவரையில் அப்டேட் கொடுக்காத படக்குழு இன்று இயக்குநர் ஹெச் வினோத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகன் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கண்டெய்னர், செட், காட்டுப்பகுதி என்று எல்லாமே காட்டப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும் போது படம் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த மேக்கிங் வீடியோவில் விஜய், அனிருத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Scroll to load tweet…