நடிகர் சூர்யா, இன்று காலை பழனி மலை முருகன் கோவிலுக்கு இயக்குனர் வெங்கி அட்லூரி உடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
Suriya Visit Palani Murugan Temple : நடிகர் சூர்யாவும் இயக்குனர் வெங்கி அட்லூரியும் இன்று காலை பழனி மலை முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் இருவரும் இணைந்து சூர்யா 46 என்கிற திரைப்படத்தில் பணியாற்ற உள்ளனர். அப்படத்தின் ஸ்கிரிப்ட் புக்குடன் இருவரும் பழனியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது நடிகர் சூர்யா தாடி இன்றி யங் லுக்கில் காட்சியளித்தார். படத்திலும் அவர் இந்த தோற்றத்தில் தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா கைவசம் உள்ள படங்கள்
நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக ரெட்ரோ திரைப்படம் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிலீஸ் ஆன இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. ரெட்ரோ வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா
இதுதவிர சூர்யா கைவசம் உள்ள மற்றொரு திரைப்படம் சூர்யா 46. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இவர் ஏற்கனவே வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
சூர்யா 46 திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாக உள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டுவர உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.
