நடுரோட்டில் ஆண் நபருடன் சண்டை போட்ட துணை நடிகை..! அத்துமீறியதாக பரபரப்பு குற்றச்சாட்டு..!
உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த துணை நடிகை தன்னுடைய ஆண் நண்பர், அத்து மீறியதாக நடுரோட்டில் சண்டை போட்ட சம்பவம் மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில், வெகு நேரமாக கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில்... அதில் இருந்த ஒரு பெண்ணும் - ஆணும் ஆக்ரோஷமான வார்த்தைகளை வெளிப்படுத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இந்த காட்சியை அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்த போதிலும், கணவன் மனைவி சண்டை என நினைத்து யாரும் சமரசம் செய்யவில்லை.
ஒரு நிலையில் காரில் இருந்த துணை நடிகை கீழே இறங்கி தன்னுடைய ஆண் நண்பரிடம் மிகவும் கோபமாக கத்தியதோடு, இருவரும் ஒருவரை ஒருவர் அடிக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த காவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரிடமும் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த துணை நடிகை அங்கிதா விஸ்வநாத் என்றும் அவருடன் இருக்கும் நபர் பிகாரைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்றும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் மும்பையில் இருந்து கோயம்புத்தூர் இஷா மையத்திற்கு, மகா சிவராத்திரியை முன்னிட்டு வந்துள்ளனர். சிவராத்திரி விழா முடிந்த பின்னர் தமிழகத்தை சுற்றிப் பார்க்க திட்டமிட்ட இருவரும் வாடகை கார் ஒன்றை எடுத்து, அதன் மூலம் பல்வேறு இடங்களில் சுற்றிப் பார்த்துள்ளனர்.
அந்த வகையில் மதுரையில் விடுதி எடுத்து தங்கி அங்கிருந்த இடங்களை சுற்றிப் பார்த்த பின்னர், ராமேஸ்வரம் செல்ல திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இடையில் தன்னுடைய ஆண் நண்பர் அத்து மீறி நடந்ததாகவும், தன்னுடைய பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் கூறி அவரிடம் அந்தப் பெண் சண்டை போட்டுள்ளார்.
இதன் காரணமாக இருவரும் நடு ரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கியதை தொடர்ந்து, போலீசார் நிதீஷ் குமாரிடம் விசாரித்த போது அவர் அங்கிதாவின் பணத்தை எடுக்கவில்லை எனவும், தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டை மறுத்தார். இதைத்தொடர்ந்து போலீசார் இதுவரையும் அவரவர் ஊருக்கு செல்லும்படி கூறியதோடு, அவர்களின் முழு விவரங்களையும் சேகரித்துள்ளனர்.
அதேபோல் இருவரும் ஏதேனும் போதைப் பொருட்களை பயன்படுத்தினார்களா? அவர்களின் பின்னணி குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.