காந்தாரா படம் பார்த்து சிலிர்த்துப் போனேன்... இந்திய சினிமாவின் மாஸ்டர் பீஸ் இது - புகழ்ந்து தள்ளிய ரஜினி
கன்னடத்தை போல் பிற மொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்று வரும் காந்தாரா படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவை வியந்து பாராட்டி உள்ளார்.
யாஷ் நடித்த கேஜிஎப் படத்தை இயக்கிய ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், அடுத்ததாக தயாரித்துள்ள படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள இப்படம் கடந்த மாதம் 30-ந் தேதி ரிலீசானது. முதலில் கன்னடத்தில் மட்டும் வெளியிடப்பட்ட இப்படத்திற்கு அங்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.
கன்னடத்தை போல் பிற மொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் கார்த்தி, காந்தாரா படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்து, கட்டியணைத்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
இதையும் படியுங்கள்... ரஜினி, விஜய்-லாம் இல்லைங்க... தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்..!
இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த், காந்தாரா படம் பார்த்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “தெரிந்தவையை விட தெரியாதவை அதிகம். ஹோம்பாலே பிலிம்ஸை தவிர யாரும் இதை சினிமாவில் சிறப்பாக சொல்லியிருக்க முடியாது. காந்தாரா படம் பார்த்து சிலிர்த்துப்போனேன். ரிஷப் ஷெட்டி, உங்கள் நடிப்பு, இயக்கம் மற்றும் எழுத்துக்கு தலைவணங்குகிறேன். இந்திய சினிமாவிற்கு இப்படி ஒரு மாஸ்டர் பீஸை கொடுத்ததற்கு ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து ரிஷப் ஷெட்டி பதிவிட்டுள்ளதாவது : “அன்புள்ள ரஜினிகாந்த் சார். நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார், நான் சிறுவயதில் இருந்தே உங்களுடைய ரசிகன். நீங்கள் பாராட்டியது, என் கனவு நனவானது போல் உள்ளது. நிறைய லோக்கல் கதைகளை எடுக்க நீங்கள் தான் எனக்கு உத்வேகம் அளித்துள்ளீர்கள். நன்றி சார்” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... என்னால சிரிப்ப அடக்க முடியல.. வா ராஜா வா - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் குறித்து விக்ரம் போட்ட டுவிட் வைரல்