கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு தேறி வந்த அவருக்கு கடந்த 4ம் தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா நெகட்டிவ் என்று தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த  வெள்ளிக்கிழமை மதியம் 1.04 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 

இதையடுத்து அவருடைய உடல் தாமரைப்பாகத்தில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தனது இனிய குரலில் இசையுலகை ஆண்ட அவருடைய பிரிவை ஏராளமானோரால் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

எஸ்.பி.பி.யின் குண நலன்கள், மறக்க முடியாத சந்திப்புகள், அவருடைய குறும்பு பேச்சுகள் என பிரபலங்கள் பலரும் தங்களது மனக்குமுறல்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளரான ஸ்வப்னா தத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், குழந்தைகள் பாட்டு பாடும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவரை அழைக்க சென்றிருந்தேன். அப்போது அவர் என்னிடம் ஒரே ஒரு கண்டிஷன் போட்டார். அதாவது நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் குழந்தைகள் அழுவதை நான் அனுமதிக்கமாட்டேன். அப்படி அவர்கள் அழுதாலும் அதை நீங்கள் படம் பிடித்து டி.ஆர்.பி.யாக மாற்ற நினைக்க கூடாது என்றார். 

இதையும் படிங்க: “அஜித் வீட்டில் இருந்தே வருத்தப்பட்டுக் கொள்ளட்டும்”... செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளித்த எஸ்.பி.பி.சரண்!

அன்று அவருடனான என் சந்திப்பு குழந்தைகள் நிகழ்ச்சி குறித்த என் பார்வையையே மாற்றிவிட்டது. எனது குழந்தைகள் மற்றும் அடுத்தடுத்து வரும் தலைமுறை குழந்தைகளுக்கும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதை வாசிக்கும் ரசிகர்களோ யாரையும் கோபித்துக் கொள்ளாத, யாரை புண்படுத்ததாத குழந்தை மனதுக்கு சொந்தக்காரர் தானே எஸ்.பி.பி. அவர் இப்படி சொன்னதில் ஆச்சர்யமில்லை என நெகிழ்ந்து பதிவிட்டுள்ளனர்.