சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி.
Sanam Shetty Joins in Sanitary Workers Protest : பணி நிரந்தரம் கோரி தூய்மை பணியாளர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை வாயிலில் கடந்த 11 நாட்களாக இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்திருந்ததோடு, போராட்டக் குழுவை தன்னுடைய அலுவலகத்துக்கு வர வழைத்து அவர்களிடம் தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். இந்த நிலையில், நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி, தூய்மை பணியாளர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு, அவர்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்ததோடு, அரசை கடுமையாக விமர்சித்தும் பேசி இருக்கிறார்.
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் சனம் ஷெட்டி
அவர் பேசியதாவது : “ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு, ரொம்ப அசிங்கமாவும் இருக்கு. 10 நாட்களா போராடுகிறார்கள். என்ன பிரச்சனைனு கூட கேட்காம, அவர்களின் கோரிக்கையையும் கேட்காமல் அனாதையா விட்டுட்டாங்க. இருங்க, போங்க, சாவுங்க எனக்கென்னனு இருக்கிறது அரசாங்கம். கொரோனா டைம்ல, வீட்டு வாசலுக்கு கூட போகாத நிலைமையில் உயிர் பயத்தோடு இருந்தோம். அந்த நேரத்தில் அவர்கள் குடும்பத்தை கூட பார்க்காமல் மக்களுக்காக வந்து நின்றவர்கள் தான் இந்த தூய்மை பணியாளர்கள்.
இவங்க என் நண்பர்கள். இவங்களுக்காக இன்னைக்கு நான் இங்க வந்திருக்கேன். அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்கு குரல் கொடுப்பது என்னுடைய கடமையாக பார்க்கிறேன். எனக்கு இருக்கும் இந்த பொறுப்பில் ஒரு சதவீதம் கூட ஏன் அரசாங்கத்துக்கு இல்லை. உங்களுக்கு கண்ணு தெரியலையா இல்ல காது கேட்கலையானு தெரியல. மேயர் பிரியா நியூஸ் ரீடர் மாதிரி வந்துட்டு போறாங்க. ஆனா தீர்வு வரமாட்டேங்குது. முன்பு 25 ஆயிரம் கொடுத்துவிட்டு இப்போ 15 ஆயிரம் தான் கொடுப்போம். இஸ்டம் இருந்தா இருங்க, இல்லேனா போங்கனு விட்றுக்கீங்க. இது நியாயமா... பணி நிரந்தரம் ஆக்குகிறேன் என நீங்கள் கொடுத்த வாக்குறுதியை தான் அவர்கள் கேட்கிறார்கள்.
நீங்கள் உங்க வாக்கை காப்பாற்றவில்லை என்றால், இதுக்கப்புறம் உங்ககிட்ட இருந்து என்ன எதிர்பார்க்க முடியும். இவங்க பிரச்சனை என்ன என்பதை வந்து பாருங்க. உள்துறை அமைச்சர் நேரு அவர்களே... உயிரோடு தான் இருக்கீங்களா சார். மக்களுக்காக தான் இந்த அரசாங்கம். மக்களுக்காக ஒரு பாலிசி மாற்ற முடியவில்லை என்றால் அப்படிப்பட்ட ஒரு அரசாங்கம் இருந்தா என்ன? இல்லேனா என்ன? அவர்களோடது நியாயமான கோரிக்கை. அதை நிறைவேற்றுங்கள். இதுதான் இவர்கள் சார்பாக நான் வைக்கும் கோரிக்கை” என நடிகை சனம் ஷெட்டி பேசி இருக்கிறார்.
