இன்று வெளியாகி உள்ள ‘பரமசிவன் பாத்திமா’ படத்திற்கு ஆதரவு தருமாறு இயக்குனர் மோகன் ஜி வீடியோ வெளியிட்டுக் கேட்டுக் கொண்டுள்ளார்.

‘பரமசிவன் பாத்திமா’ படத்திற்கு ஆதரவாக மோகன் ஜி வெளியிட்ட வீடியோ 

தமிழ் சினிமாவில் சர்ச்சை இயக்குனராக வலம் வருபவர் மோகன் ஜி. இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். இவரின் ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’, ‘பகாசுரன்’ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. தற்போது ‘திரௌபதி 2’ திரைப்படத்தை மோகன் ஜி இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவர் ‘பரமசிவன் பாத்திமா’ படத்திற்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

மதமாற்றம் குறித்து பேசும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம்

நடிகர் விமல், சாயாதேவி, கூல் சுரேஷ், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘பரமசிவன் பாத்திமா’. இந்த படத்தை இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியான போதே படத்தின் மீது தனி கவனம் ஏற்பட்டது. அதற்கு காரணம் இந்த படம் மதமாற்றம் குறித்து பேசியது தான். இந்தியாவில் கட்டாய மதமாற்றம் செய்வதற்கு தடை உள்ள நிலையில் இந்த படம் எந்த மதமாற்றம் குறித்து பேசுகிறது என்று கேள்வி பலருக்கும் எழுந்தது. இந்த நிலையில் படம் இன்று (ஜூன் 6) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘பரமசிவன் பாத்திமா’ டிரெய்லர் நன்றாக இருந்தது - மோகன் ஜி

நேற்று (ஜூன் 5) வெளியான ‘தக் லைஃப்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், அதற்கு போட்டியாக ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஆதரவாக இயக்குனர் மோகன் ஜி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒற்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், “எனது நண்பர் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள படம் ‘பரமசிவன் பாத்திமா’ இன்று வெளியாகி இருக்கிறது. தமிழர்கள் மீது அதிக பற்று கொண்ட அவர், ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்றால், அந்த படம் எப்படி இருக்கும்? என்ன மாதிரியான கருத்துக்களுடன் இருக்கும்? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. டிரெய்லரைப் பார்த்தேன். மிக நன்றாக உள்ளது. படத்தை இன்னும் பார்க்கவில்லை. ‘திரௌபதி 2’ படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறேன்.

Scroll to load tweet…

படத்திற்கு மக்கள் ஆதரவு கொடுங்கள்

இந்த மண்ணுக்கானவர்கள் யார்? தமிழ்நாட்டின் பூர்வகுடிகள் யார் என்பதை ஹாரர் ஃபீலிங்கில் எடுத்துள்ளார்கள். நேற்று இந்த படத்தின் ஸ்னீக் பீக் பார்த்தேன். மிக நன்றாக இருந்தது. எம்.எஸ். பாஸ்கர் பேசும் வசனங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது. சுப்பிரமணியபுரமாக இருக்கும் ஊரை எப்படி யாக்கூப்புரமாக மாற்றுகிறார்கள் என்பதை படம் பேசுகிறது. இது போன்ற கதை, திரைக்கதை கொண்ட படங்களில் நடிப்பவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வேண்டும். படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இது போன்ற படங்களுக்கு மக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அது அவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும்” என அந்த வீடியோவில் பேசி இருந்தார்.

Scroll to load tweet…

மோகன்ஜிக்கு இசக்கி கார்வண்ணன் நன்றி

அவரது வீடியோவை பகிர்ந்த இயக்குனர் இசக்கி கார்வண்ணன், “மோகன்ஜியுடன் எனக்கு நேரடியான பழக்கம் எதுவும் இல்லை. சக இயக்குனராக மட்டுமே அவரை அறிவேன். ஆனால் தானாக முன்வந்து இந்த படத்தை பாராட்டி இருக்கும் சகோதரர் மோகன்ஜிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்” என பதிவிட்டுள்ளார். கேங்ஸ்டர் கதையில் உருவாகி இருக்கும் ‘தக் லைஃப்’ மற்றும் மதமாற்றம் குறித்து பேசி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ ஆகிய இரு படங்களில் எது வெற்றி பெறப் போகிறது? என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.