ரவி மோகன் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கம் மூலமாக அறிவித்துள்ளார்.

ரவி மோகனின் திரைப்பயணம் 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரவி மோகன். 2003-ம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்திற்குப் பின்னர் ஜெயம் ரவி என்று அறியப்பட்ட, அவர் சில மாதங்களுக்கு முன்பு தன் பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். ‘ஜெயம்’ படத்திற்குப் பின்னர் ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘பேராண்மை’, ‘நிமிர்ந்து நில்’, ‘தனி ஒருவன்’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

ரவி மோகன் நடித்து வரும் திரைப்படங்கள்

ரவி மோகன் தற்போது ‘கராத்தே பாபு’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய இரண்டு படங்களில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்து வருகிறார். தொடர்ந்து ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜீனி’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் அவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘தனி ஒருவன்’ படத்தில் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது.

ரவி மோகன் - ஆர்த்தி பிரிவு

திரைத்துறைக்கு வந்து 23 ஆண்டுகள் ஆனபோதிலும் நல்ல கதம்சத்துடன் கூடிய படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக குறைந்த படங்களிலேயே ரவி மோகன் நடித்துள்ளார். இவரது பல படங்கள் தோல்வியையும் சந்தித்துள்ளன. தற்போது ரவி மோகனின் வாழ்க்கையிலும் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருந்தார். அவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்திலும் வழக்க தொடர்ந்துள்ளார். ரவிமோகனுக்கும் பாடகி கெனிஷாவுக்கும் இடையே இருந்த நட்புதான் ரவி மோகன் - ஆர்த்தி பிரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

யோகி பாபுவை வைத்து படம் இயக்கும் ரவி மோகன்

கெனிஷா உடன் சில நாட்களுக்கு முன்பு திருமண விழாவிற்கு வந்திருந்த ஜெயம் ரவி ஒரே போல் உடையணிந்து கணவன் மனைவி போல் வந்திருந்தனர். இதன்பின்னர் பிரச்சனை பூதாகரமாகத் தொடங்கியது. இறுதியாக நீதிமன்றத்தை நாடி இருக்கும் ரவி மோகன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வரும் போதிலும் புதிய தொடக்கங்களை ரவி தொடங்கி வருகிறார். அந்த வகையில் விரைவில் அவர் இயக்குனராக களமிறங்க இருக்கிறார். தனது முதல் படத்தை யோகி பாபுவை வைத்து இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன்

தொடர்ந்து தயாரிப்பாளராகவும் ரவி மோகன் அவதாரம் எடுத்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ மற்றும் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்கிற தனது பெயரிலேயே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என அடுத்தக் கட்டத்தை நோக்கி செல்லும் ரவி மோகனின் புதிய பயணத்திற்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

View post on Instagram