லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் - விஜய்சேதுபதி முதன் முறையாக இணைந்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை ஓட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், எப்போது வெளியிடப்படுகிறது என்ற தகவலை தயாரிப்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. 

இடையில் ஓடிடி ரிலீஸ் குறித்து விளக்கம் அளித்த போது கூட தியேட்டரில் வெளியாகும் என உறுதியளித்த தயாரிப்பாளர்கள், என்ன தேதியில் வெளியாகும் என்பதை குறிப்பிடவில்லை. இதனிடையே மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாகவும், அதற்கான தீவிர பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இதனிடையே நேற்று இரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் நடிகர் விஜய் ரகசியமாக சந்தித்துள்ளார். அந்த ஆலோசனையின் போது மாஸ்டர் பட ரிலீசுக்கு ஒத்துழைப்பு தரும்படியும், தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கும் படியும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர்  சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: “ஏ.ஆர்.ரகுமானை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர்”... முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்...!

மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்ற முடிவில் நடிகர் விஜய் உறுதியாக இருப்பதாகவும், அந்த முடிவால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு உதவிய விஜய்க்கு நன்றி தெரிவிப்பதாகவும் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார். மேலும் மாஸ்டர் திரைப்படம் உறுதியாக ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது என்ற செய்தியையும் தெரிவித்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.