தி கேரளா ஸ்டோரி படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால் கடும் எதிர்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாக அரசுக்கு உளவுத்துறை திடீர் அலர்ட் விடுத்துள்ளது.
சுதிப்தோ சென் இயக்கியுள்ள திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. அடா ஷர்மா, சித்தி இத்னானி உள்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடித்துள்ள இப்படம் இந்தியில் உருவாகி உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வருகிற மே 5-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படத்தில் இருந்து 10 சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய சென்சார் போர்டு இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.
தி கேரளா ஸ்டோரி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் பெண்களை மதமாற்றம் செய்து, அவர்களை ஆப்கானிஸ்தானுக்கு அழைத்து சென்று அங்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்த்துவிடுவது போன்ற கதைக்களம் அமைந்துள்ளது. இது சர்ச்சையில் சிக்கியதற்கு உண்மை காரணம் என்னவென்றால் இது உண்மையில் நடந்த சம்பவம் என குறிப்பிட்டுள்ளது தான்.
இதையும் படியுங்கள்... ஒரு காட்சியில் கூட கேரளாவை தவறாக காட்டவில்லை... ‘தி கேரளா ஸ்டோரி’ நாயகி அடா ஷர்மா எக்ஸ்குளூசிவ் பேட்டி

இந்த டிரைலர் வெளியானதில் இருந்து இப்படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முதல்வர் பினராயி விஜயன் உள்பட அங்குள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், கேரளா ஸ்டோரி படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவது குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் வெளியிட்டால் இங்கும் எதிர்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கேரளா ஸ்டோரி படம் ரிலீஸ் ஆவதை அனுமதிக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு உளவுத்துறை பரிந்துரை செய்துள்ளது.
இதையும் படியுங்கள்... ‘தி கேரளா ஸ்டோரி’ உண்மை கதையா? ஆதாரத்தை காட்டுறவனுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் - ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு
