தி கேரளா ஸ்டோரி படத்தின் கதை குறித்தும், அப்படத்தை சுற்றிய சர்ச்சைகள் குறித்தும் நடிகை அடா சர்மா, ஏசியாநெட் நியூஸுக்கு எக்ஸ்குளூசிவ் பேட்டி அளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மிகவும் ஹாட் டாப்பிக் ஆக பேசப்பட்டு வரும் திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இந்தியில் இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கியுள்ள இப்படத்தில் அடா ஷர்மா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற மே 5-ந் தேதி தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தைப்பற்றி நடிகை அடா ஷர்மா நம் ஏசியாநெட் நியூஸுக்கு அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டியில் என்ன பேசினார் என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்.
கேரளா ஸ்டோரி கதையை தேர்ந்தெடுத்தது ஏன்?
கதையை கேட்டதும் நான் எமோஷனல் ஆனேன். நான் ஒரு பெண் என்பதால், இன்னொரு பெண்ணின் வலியை என்னால் எளிதில் அடையாளம் காண முடிகிறது. நான் என் அம்மாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். போன் கூட அனுமதிக்கப்படாத இடத்தில், அம்மா இல்லாமல் இருக்க வேண்டிய ஒரு பெண்ணின் கதை இது. மக்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான இந்தக் கதையை நான் சொல்கிறேன் என்று என் குடும்பத்தினர் பெருமிதம் கொண்டனர்.
இந்த படத்துக்காக அப்படி தயார்படுத்திக் கொண்டீர்கள்?
கேரளா ஸ்டோரி படத்தில் நடிக்கும் முன் நான் சில பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தேன், அவர்கள் உட்கொண்ட போதைப்பொருட்களைப் பற்றி நிறையப் படித்தேன், அவர்கள் எப்படி கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்பது பற்றிய வீடியோக்களைப் பார்த்தேன். கேரளாவில் உள்ள சிறுமிகளுக்கு போதை மருந்து கொடுத்து, வலுக்கட்டாயமாக அவர்களை அவர்களின் அழகான வீடுகளில் இருந்து பிழைப்புக்காக போராட்டம் நிறைந்த ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதையும் அறிந்தேன்.
இதையும் படியுங்கள்... ‘தி கேரளா ஸ்டோரி’ உண்மை கதையா? ஆதாரத்தை காட்டுறவனுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் - ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

சர்ச்சைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மனிதர்களாகிய நாம் நேர்மறையை விட எதிர்மறையையே அதிகம் பார்க்கிறோம். இன்று காலை எழுந்தவுடன், நான் முதலில் பார்த்தது என்னவென்றால், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை பலர் எனக்கு அனுப்பி இருந்தனர். அதில் 'தி கேரளா ஸ்டோரி' தான் நம்பர் 1 இடத்தில் இருந்தது. நேர்மறையான செய்திகள் எனக்கு தொடர்ந்து வருகின்றன. இந்த படத்தில் நடித்ததற்கு கேரளாவை சேர்ந்தவர்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்தக் கருத்துக்கள் நிறைந்திருப்பதைக் காணலாம்.
ஆனாலும், 2 நிமிட டிரெய்லரைப் பார்த்துவிட்டு சிலர் குறை கூறுகிறார்கள். எல்லோருடைய கருத்தையும் மதிக்க என என் பெற்றோர் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். எனவே இவர்கள் நேரம் ஒதுக்கி 2 மணி நேரம் படம் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்; ஒரு இடத்தில் கூட கேரளாவை நாங்கள் மோசமாக காட்டவில்லை என்பதை அவர்கள் படம் பார்த்த பின் புரிந்துகொள்வார்கள். கேரளாவை பற்றி எங்கும் தரக்குறைவாக எதுவும் கூறப்படவில்லை.
தி கேரளா ஸ்டோரி படத்தை ஏன் பார்க்க வேண்டும்?
கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் உள்ள நாட்டில் நாம் வாழ்கிறோம். 'தி கேரளா ஸ்டோரி' என்பது தேர்தல், அரசியல் அல்லது மதம் மற்றும் மதமாற்றம் பற்றியது அல்ல... இது பயங்கரவாதம் மற்றும் மனிதநேயம் பற்றியது. ஒவ்வொரு குடும்பமும் பார்க்க வேண்டிய படம் இது. குறிப்பாக ஒவ்வொரு பெண்ணும் இந்த படத்தை பார்க்க வேண்டும்” என அடா ஷர்மா கூறினார்.
இதையும் படியுங்கள்... இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் பாவலர் சிவன் காலமானார்
