Hurun India Rich List 2025 : ஹுருன் இந்தியா 2025 பணக்காரர்கள் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் பில்லியனர் கிளப்பில் இணைந்துள்ளார். ரூ.12,490 கோடி சொத்து மதிப்புடன் அவர் பாலிவுட் நட்சத்திரங்களில் முதலிடம் பிடித்துள்ளார்.
2025 M3M ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல்:
மூன்று தசாப்தங்களுக்கும் மேலான தனது திரை வாழ்க்கையில் முதல் தேசிய விருதை வென்ற சில நாட்களில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் இப்போது அதிகாரப்பூர்வமாக பில்லியனர் கிளப்பில் இணைந்துள்ளார். ஆம், நீங்கள் படித்தது சரிதான். கிங் கானின் பெயர் 2025 M3M ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பாலிவுட் நட்சத்திரங்களுக்கான M3M ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் ரூ.12,490 கோடி என்ற பிரம்மாண்ட சொத்து மதிப்புடன் அவர் முதலிடம் பிடித்துள்ளார். ஷாருக் கானின் இந்த சொத்து மதிப்பு, அவர் 2002-ல் நிறுவிய ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தால் பெருமளவில் ஈட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, இந்த நிறுவனம் 'ஓம் சாந்தி ஓம்', 'ஹாப்பி நியூ இயர்', 'ஜவான்' மற்றும் சமீபத்தில் வெளியான, ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் இயக்கிய 'தி பா***ட்ஸ் ஆஃப் பாலிவுட்' போன்ற பல வெற்றிப் படைப்புகளைக் கொடுத்துள்ளது.
இந்தப் பட்டியலில் ஷாருக் கானுக்கு அடுத்தபடியாக, ஜூஹி சாவ்லா மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.7,790 கோடி நிகர மதிப்புடன் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர். இது முக்கியமாக நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸில் உள்ள அவர்களது பங்கின் காரணமாகும். இவர்களது வரிசையில் 3ஆவது இடம் பிடித்திருப்பவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். அவர் ரூ.2,160 கோடியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவரது ஃபிட்னஸ் மற்றும் லைஃப்ஸ்டைல் பிராண்டான HRX-ன் வெற்றியே இதற்குக் காரணம். கரண் ஜோஹர் ரூ.1,880 கோடியுடன் நான்காவது இடத்திலும், அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1,630 கோடியுடன் முதல் ஐந்து இடங்களையும் நிறைவு செய்கின்றனர்.

இந்த பட்டியல் குறித்து ஹுருன் இந்தியாவின் நிறுவனர் மற்றும் தலைமை ஆய்வாளர் அனஸ் ரஹ்மான் ஜுனைத் கூறுகையில், "M3M ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2025, எச்சரிக்கையுடன் கூடிய ஒரு ஆற்றல்மிக்க முன்னேற்றத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் பணக்காரர்களின் ஒட்டுமொத்த செல்வம் 167 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 643 பேர் செல்வத்தை இழந்த நிலையில், 1,044 பேர் செல்வத்தை ஈட்டியுள்ளனர்.
OG Collection Impact: ரெஸ்டே இல்லை; புதிய படம் குறித்து அறிவித்த பவன் கல்யாண்!
இது செல்வத்தை உருவாக்கும் இயந்திரம் வலுவாக இருப்பதைக் காட்டுகிறது. தொழில்நுட்பம், தொழில்துறை தயாரிப்புகள், ஆட்டோமொபைல்கள், உள்கட்டமைப்பு, நகைகள் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றிலிருந்து இந்த எழுச்சி வந்துள்ளது. இது உள்நாட்டுத் தேவை, கொள்கை சார்ந்த உற்பத்தி வளர்ச்சி மற்றும் துடிப்பான பங்குச் சந்தை ஆகியவற்றால் இயக்கப்படுகிறது.
இந்தியாவில் இப்போது 358 டாலர் பில்லியனர்கள் உள்ளனர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இது 200 ஆக இருந்தது. இவர்கள் அனைவரும் சேர்ந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதிக்கு சமமான செல்வத்தைக் கொண்டுள்ளனர். முதல் தலைமுறை நிறுவனர்களின் எழுச்சி, பெருநகரங்களுக்கு அப்பாற்பட்ட பிராந்திய மையங்கள் மற்றும் பொருளாதாரத்தை மறுவடிவமைக்கும் புதிய வயதுத் துறைகள் ஆகியவற்றில் இந்த நம்பிக்கை பிரதிபலிக்கிறது," என்றார். இந்தக் கண்டுபிடிப்புகள் M3M ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2025-ன் 14வது பதிப்பின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
