‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மீது வழக்கு தொடர பலர் கூறினர். ஆனால் தான் அவ்வாறு செய்யப்போவதில்லை என்று இயக்குனரும், நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் கூறியுள்ளார்.

மாபெரும் வெற்றி பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ 

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம். எஸ் பாஸ்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இலங்கை தமிழர்களான சசிகுமார் மற்றும் அவரது குடும்பம் பொருளாதார சூழ்நிலை காரணமாக தமிழகத்திற்குள் அகதிகளாக வருகின்றனர். இவர்கள் சட்ட விரோதமாக தமிழ்நாட்டில் குடியேருகின்றனர். இங்கு இந்த குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையுடனும், அதே சமயம் உணர்வுப்பூர்வமாகவும் இந்த படம் பதிவு செய்திருந்தது.

மீண்டும் டிரெண்டான “மலையூரு நாட்டாம..” பாடல்

தற்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ஓடிடியிலும் பலர் இந்த படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு காட்சியில் பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘மம்பட்டியான்’ படத்தில் இடம்பெற்ற “மலையூரு நாட்டாம..” என்னும் பாடலை படக் குழுவினர் பயன்படுத்தியிருந்தனர். அந்தப் பாடலுக்கு சசிகுமார் தனது மகன்களுடன் இணைந்து ஆடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதே பாடலுக்கு படக்குழுவினர் அனைவரும் நடனமாடி வைப் செய்து இருந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது. மேலும் “மலையூரு நாட்டாம..” பாடலும் இணையத்தில் ட்ரெண்டாகத் தொடங்கியது.

‘மம்பட்டியான்’ பட இயக்குனர் தியாகராஜன் பேட்டி

இந்த நிலையில் ‘மம்பட்டியான்’ படத்தை இயக்கிய இயக்குனர் தியாகராஜனிடம் இது குறித்து பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “‘டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் “மலையூரு நாட்டாம..” பாடலை பயன்படுத்துவதற்கு என்னிடம் எந்த அனுமதியும் வாங்கவில்லை. அந்த பாடல் மீண்டும் மக்களிடம் ஹிட்டாகி உள்ளது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவை நான் வாழ்த்தி இருந்தேன். அவர்கள் என்னிடம் அனுமதி பெறாமல் இந்த பாடலை பயன்படுத்தியதற்காக அவர்கள் மீது வழக்கு தொடுக்குமாறும், பணம் கேட்குமாறும் பலரும் என்னிடம் கூறினார்கள்.

காப்பிரைட்ஸ் கேட்க மாட்டேன் - தியாகராஜன் விளக்கம்

ஆனால் எனக்கு அது மாதிரியான எந்த எண்ணமும் இல்லை. அந்த பாடல் மீண்டும் ஹிட்டாகி இருப்பதற்கு நான்தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவினருக்கு பணம் கொடுக்க வேண்டும். பல வருடங்கள் கழித்த பின்னரும் அந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் அந்தப் பாடலை பயன்படுத்தி அதற்காக நான் காப்பிரைட்ஸ் கேட்கவில்லை. இனியும் கேட்கப் போவதில்லை. இந்தப் பாடல் மட்டுமல்ல. நான் எடுத்த படங்களில் வந்த பாடலை யார் பயன்படுத்தினாலும் காப்பிரைட்ஸ் கேட்க மாட்டேன்” என பேசி உள்ளார்.

தியாகராஜனை வாழ்த்தும் ரசிகர்கள்

இயக்குனர் தியாகராஜனின் இந்த பெருந்தன்மையான வார்த்தைகளை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.