விபத்தில் சிக்கி... சாவின் விளிம்பில் இருந்து மீண்ட இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி மருத்துவமனையில் இருந்து அறிக்கை!
ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை இயக்குனர் கே .எஸ்.தங்கசாமி கடந்த மாதம் விபத்தில் சிக்கிய நிலையில் தற்போது மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கை இதோ..
விபத்தால் நானும் எனது குடும்பமும் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பு நுனி வரை தொட்டு பார்த்து இன்றோடு 25 நாட்கள் ஆகின்றன. மனைவியின் உறவுகளில் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக கேரளம் சென்று திரும்புகையில் இவ்விபத்து ஏற்பட்டது. சில வருட காத்திருப்புக்கு பிறகு அனைத்தும் கைகூடி வந்த வேளையில், இவ்வாறு நடந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அதிகாலை நேரத்தில் இன்னொரு வாகன ஓட்டுனரின் கவனக்குறைவால் இது நிகழ்ந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி காரின் கதவுகளை உடைத்து எங்களை வெளியில் மீட்டெடுத்து இருக்கிறார்கள். அனைவருமே யாரென்று தெரியாத அந்த வழியாக சென்ற முகமறியா மனிதர்கள். எங்களை தீவிரமாக போராடி காப்பாற்றி சரியான மருத்துவமனையில் அனுமதித்தது வரை எல்லாமே யாரென்றே தெரியாத இன்னொரு மாநிலத்தை சேர்ந்த இந்த முகமறியா மனிதர்கள்தான். இவர்கள் இல்லாவிட்டால் இன்று நாங்கள் இல்லை. இவர்களுக்கு நன்றி என்பது மிக மிக சிறிய சொல் என்பதாக உணர்கிறேன்.
இப்பொழுதெல்லாம் சாலை விபத்துகளை சாதாரணச் செய்தியாக கடந்து போய் விடுகிறோம். பேருந்து பாலத்திலிருந்து விழுந்தது என்பதும் கார் குப்புற கவிழ்ந்தது என்பதும் அதிர்ச்சியே தருவதில்லை. எத்தனை கனவுகளும் எதிர்பார்ப்புகளும் நொடி கணத்தில் இந்த சாலைகளில் சிதற அடிக்கப்படுகின்றன. வண்டி ஓட்டுபவர்கள் இதையெல்லாம் கவனத்தில் கொள்வதே இல்லை. ஒருவரின் வாழ்க்கையை, துன்பங்களை புரிந்து கொள்ள வேண்டுமானால் அவரது பாதங்களில் நின்று அதனை பார் என்ற திபெத்திய பழமொழியை நினைவு கூர்கிறேன்.
விபத்து நடந்த இடத்திற்கு அருகிலிருந்த ராஜகிரி (ஆலுவா) மருத்துவமனையில் நானும் மனைவியும் குழந்தைகளும் கொண்டு செல்லப்பட்டோம். நல்லூழ் விளைவாக பிள்ளைகளுக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை. எல்லோருக்கும் சேர்த்து தான் வாங்கி கொண்டதை போல் என் மனைவிக்கு இந்த விபத்தில் பலத்த அடிபட்டு விட்டது. எனக்கும் பல எலும்புகள் முறிந்து வலியின் உச்சத்தை காண விதி வழி செய்தது.
முதல் பத்து நாட்களுக்கு மேல் உடலின் வேதனை எதனையும் யோசிக்க விடாமல் செய்தது. உடைபட்ட இடங்களை நவீன மருத்துவம் ஸ்க்ரூக்கள் வழியாகவும் உலோக தட்டுகளின் வழியாகவும் இணைக்கின்றது. என் மனைவிக்கு தேவைப்பட்ட இடங்களில் அறுவை சிகிச்சையின் வழியாக மருத்துவர்கள் இவற்றை பொருத்தினார்கள். அதன் பிறகு படுக்கையில் இருந்து என்னால் அசைவதற்கு கூட முடியவில்லை. நாம் கற்பனையில் நமக்கு பல மடங்கு வலு இருப்பது போலவும், எதையும் தாங்க முடியும் என்றும் நினைக்கின்றோம். ஆனால் நிஜமான வலியோ துன்பமோ நேரும்போது தான் நாம் எவ்வளவு வலுக்குறைவானவர்கள் என்பது புரிகிறது.
ராஜகிரி மருத்துவமனையை பற்றி குறை சொல்ல எதுவுமில்லை. குறை என்ற வார்த்தையையே பயன்படுத்த கூடாது. அந்த அளவு அங்கு பணிபுரியும் செவிலியர்களும் சரி, மருத்துவர்களும் சரி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட கனிவையும் அன்பையும் சேவையையும் அளித்தனர். அதுவே துவண்டு போன எனக்கும் எனது மனைவிக்கும் உண்மையான மருந்தாக அமைந்தது.
ஒரு வாரத்திற்கு முன் மருத்துவமனையில் இருந்து விடுபடலாம் என்ற செய்தி கிடைத்து எல்லோரும் மகிழ்ந்தனர். ஆனால் சிகிச்சை இன்னும் முடியவில்லை என்பதை பிறகே அனைவரும் தெரிந்து கொண்டனர். மருத்துவமனைக்கு பக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறோம். அடிக்கடி மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து வர வேண்டிய நிலை இருப்பதால் இன்னும் ஒரு மாதம் வரை இங்கு இருக்க வேண்டும். அதன் பிறகு ஊர் மீண்டு அங்கும் இரண்டு மாதகாலம் படுக்கை தான். நேரடியாக சொல்ல வேண்டுமானால் அடுத்த ஆறு மாதம் வீடுதான். ஏதேனும் ஒரு பொருளைஎடுப்பதை கூட யோசித்து கையாள வேண்டும் என்ற மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்கையிலேயே சோர்வு உடலெங்கும் ஏற்படுகிறது. பெரியவர்கள் இருவருக்கும் பிரச்சனை என்றால் என்ன செய்ய முடியும், எங்களின் விதியை நொந்து கொள்வதை தவிர!
விதியை நொந்துகொள்ளும் அதே நேரத்தில் அதே விதிதான் மிகவும் உறுதுணையாக இருக்கும் உறவினர்களையும் உண்மையான நண்பர்களையும் அடையாளமும் .காட்டுகிறது. 'உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' குறளின் உண்மையான பொருளை உணர்த்திய நண்பர்களை என் வாழ்நாளில் என்றுமே மறக்க மாட்டேன். சிறுபருவத்தில் நாங்கள் கிண்டல், கேலி செய்த நண்பன் எல்லாம் இத்தனை வருடங்களுக்கு பிறகு என்னை தேடி வந்து பார்த்து செய்த உதவிகள்; குடும்பத்துடன் கிளம்பி வந்து ஆறுதல் மட்டுமல்லாமல் தேவையறிந்து எதிர்பாராத நிதி உதவியும் செய்த டெல்டா நண்பர்களுக்கு நன்றி சொல்வதை எல்லாம் விட என்ன கைம்மாறு செய்ய இயலும் என்று திகைக்கிறேன். உண்மையான நட்பை எதனாலும் ஈடு செய்ய இயலாது. இந்த நண்பர்களும் அப்படிப்பட்டவர்கள் தான்; மேலே சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.
முதலில் வலி என்னை மிகவும் சிரமப்படுத்தியது, ஆனால் வலியும் வாழ்க்கையின் ஒரு பகுதி என உணர்ந்தேன். மகிழ்வான நிமிடங்களை போல வலியும் துன்பமும் ஆன நேரங்கள் நமது வாழ்க்கையை முழுமையடைய செய்கின்றன. விரைவில் மீண்டு நின்று போயிருக்கும் பட வேலைகளை தொடங்க வேண்டும். இந்த ஓய்வு நேரத்தில் இன்னும் இன்னும் அடுத்த படத்திற்கான இறுதி வடிவத்தை பண்படுத்த வேண்டும். உடலையும் இனி நன்கு கவனித்து கொள்ள வேண்டும் என்று பல எண்ணங்கள் ஓடி கொண்டு இருக்கின்றன. எனது இடத்தை வரையறை செய்தபடியே முன் செல்ல வேண்டியது இருக்கிறது. துன்பத்தையும் பெரு வலியையும் கொடுக்கும் இறையருள் அதேயளவு நல்லதையும் அளிக்கிறது; நமது எண்ணங்களை கவனித்து நமக்கு எது உகந்ததோ அதையும் நிறைவேற்றுகிறது என்ற உண்மையுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன். நலம் விசாரித்த அனைவருக்கும் மற்றவர்க்கும் மனமார்ந்த நன்றியும் அன்பும்! என இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.