Hari Father Death: பிரபல இயக்குனர் ஹரியின் தந்தை காலமானார்..! கண்ணீரில் மூழ்கிய விஜயகுமார் குடும்பம்..!
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் சம்மந்தியும், இயக்குனருமான ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் இன்று காலை வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இயக்குனர் ஹரி, காமர்ஸில் பட்ட படிப்பு படித்திருந்தாலும் திரைப்படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வத்தின் காரணமாக, தூத்துக்குடியில் இருந்து வந்து இயக்குனர் செந்தில்நாதன், ஜீவபாலன், அமீர் ஜான், நாசர் உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பின்னர், நடிகர் பிரசாந்த் - சிம்ரன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இந்தப் படத்தை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு விக்ரம் - திரிஷா நடிப்பில், ஹரி இயக்கிய 'சாமி' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், சேவல், சிங்கம் சீரிஸ் போன்ற படங்கள் அடுத்தடுத்து ஹிட் லிஸ்டில் இணைந்தன. பொதுவாக இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் உருவாகும் படங்களில் கிராமத்து சாயல் இருக்கும். இது இவரின் தனி சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது.
கடைசியாக தன்னுடைய மச்சினன் அருண் விஜயை வைத்து 'யானை' படத்தை இயக்கிய ஹரி, தற்போது விஷாலின் 34-ஆவது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவரின் தந்தை வி ஆர் கோபாலகிருஷ்ணன் வயது மூப்பு காரணமாக தன்னுடைய 88 வயதில் காலமான சம்பவம், ஹரி - ப்ரீத்தா விஜயகுமாரின் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். தூத்துக்குடியில் மளிகை கடை நடத்தி வந்த இவர், தன்னுடைய மகன் முன்னணி இயக்குனர் இடத்தை பிடித்த பின்னர் சென்னைக்கு வந்து தன்னுடைய மகன் - மருமகளுடன் வசித்து வந்தார்.
தற்போது இவரின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் திரையுலகினர் அஞ்சலிக்காக இன்று பிற்பகல் 2 மணி வரை வைக்கப்பட்டிருக்கும் என்றும், இதன் பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை... இறுதி சடங்குகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.