மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு, பிரபல இயக்குனர் அமீர் மற்றும் நடிகர் சங்க உறுப்பினர் பூச்சி முருகன் ஆகியோர் மிகப்பெரிய தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை புரட்டி போட்டது மிக்ஜாம் புயல். இதனால் கொட்டி தீர்த்த வரலாறு காணாத மழை இந்த நான்கு மாவட்டங்களிலும் பலத்த சேதம் ஏற்படுத்தியது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களை விட சென்னை மக்கள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளனர்.
தரைத்தளத்தில் இருந் வீடுகளுக்கும் மழை வெள்ளம் புகுந்ததோடு , சாலைகளில் மார்பளவு தண்ணீர் ஓடியதால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் அவதி பட்டனர். குழந்தைகளுக்கு பால் வாங்க முடியாமலும், பெரியவர்களுக்கு மருந்துகள் கிடைக்காமலும்... உணவு, தண்ணீர் போன்றவை இல்லாமல் சென்னை மக்கள் பலர் பட்ட அவஸ்தைகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

மிக்ஜாம் புயல் அடித்து ஓய்ந்து விட்டாலும், இன்னும் பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. அவர்களுக்கு சமூக ஆர்வலர்களும், பிரபலங்களும் தேடி சென்று சாப்பாடு, அரிசி, பருப்பு போன்ற பொருட்களை கொடுத்து வருகிறார்கள். தமிழக அரசும், மக்களுக்கு உதவுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், இந்த இயற்கை பேரிடரை எதிர்கொள்ளும் விதத்தில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், ஆகியோர் தங்களால் முடிந்த நிதியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குமாறு தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து பல பிரபலங்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் தங்களால் முடிந்த நிதியை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் அமீர் ரூபாய் 10 லட்சம் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலினை சந்தித்து வழங்கி உள்ளார். அதேபோல், நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் பூச்சி முருகன் தன்னுடைய ஒரு மாத சம்பளம் முழுவதையும் முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
