‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் 16-வது நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. படம் அதன் மொத்த பட்ஜெட்டில் 90% வசூலை திரும்ப பெற்றுள்ளது.

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ 

சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் அடுத்த பாகமே ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்க, ஆர்யா தயாரித்துள்ளார். சந்தானத்துடன் கீத்திகா திவாரி, கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த மே 16-ம் தேதி வெளியானது.

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் கதைக்களம்

இந்த படத்தில் சந்தானம் சினிமா விமர்சகராக நடித்துள்ளார். இவரின் பணி, படங்களை விமர்சித்து அதை தோல்வியடையச் செய்வது தான். சினிமா விமர்சகர்களால் பாதிக்கப்பட்ட ஒரு இயக்குனர் தற்கொலை செய்து கொள்ள, அந்த இயக்குனரின் பேய் தியேட்டரில் வைத்து விமர்சகர்களைக் கொல்கிறது. அந்த தியேட்டருக்குள் சந்தானம் சிக்கிக் கொள்கிறார். அவர் பேய்களிடம் இருந்து எப்படி தப்பித்தார் என்பதே படத்தின் கதை. இது ஒரு ‘மெட்டா காமெடி’ வகையைச் சேர்ந்த திரைப்படமாகும். அதாவது சினிமாவுக்குள்ளேயே சினிமா பற்றிப் பேசும் கதை.

வசூல் விவரங்கள்

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், முதல் நாளில் சுமார் ரூ.3.5 கோடி வசூல் செய்தது. 7 நாட்கள் முடிவில் ரூ.12.5 கோடியும், 12 நாட்கள் முடிவில் ரூ.19 கோடியும் வசூல் செய்தது. 16-வது நாளில் இந்தியாவில் சுமார் ரூ.28 லட்சம் வசூலித்தது. படத்தின் மொத்த இந்திய வசூல் ரூ.18.09 கோடி ரூபாயாக உள்ளது. படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் நிலையில் மொத்த பட்ஜெட்டில் வசூல் 90%-ஐ நெருங்கியுள்ளது.

படம் பற்றி விமர்சனம்

இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. படத்தின் தொழில்நுட்ப முயற்சிகளையும், புதிய யோசனைகளையும் ரசிகர்கள் பாராட்டினாலும், திரைக்கதை பல இடங்களில் தடுமாறுவதாகவும், நகைச்சுவை எதிர்பார்த்த அளவு இல்லாததாகவும் குறிப்பிட்டனர். சந்தானத்தின் வழக்கமான நகைச்சுவை இந்தப் படத்தில் குறைவாக இருப்பதாக ரசிகர்கள் கவலை தெரிவித்தனர். ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தை ஒப்பிடும் போது எதிர்பார்த்த அளவுக்கு காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. சந்தனத்தை விட, மொட்டை ராஜேந்திரன், செல்வராகவன், கவுதம் மேனன் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது.