சந்தானம் காமெடியில் கலக்கினாரா? சொதப்பினாரா? டிடி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம் இதோ
ஆர்யா தயாரிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

DD Next Level Movie Review
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கெளதம் மேனன், யாஷிகா, கஸ்தூரி, செல்வராகவன் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள இப்படத்தை ஆர்யா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஆப்ரோ இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக தீபக்குமார் பணியாற்றி உள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை விரிவாக பார்க்கலாம்.
டிடி நெக்ஸ்ட் லெவல் கதைக்களம்
கிஸ்ஸா என்கிற கேரக்டரில் நடித்துள்ள திரைப்பட விமர்சகராக நடித்துள்ளார். பல படங்களுக்கு அவர் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனம் செய்கிறார். இதனால் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஷோ போடுகிறோம் தியேட்டருக்கு வாருங்கள் என்று ஒரு அழைப்பு வருகிறது. அந்த அழைப்பை ஏற்று படம் பார்க்க செல்கிறார் சந்தானம். அங்கு சென்ற பின்னர் தான் அது ஒரு பேய்கள் ஆளும் தியேட்டர் என சந்தானத்துக்கு தெரிகிறது. அந்த தியேட்டருக்குள் உள்ளே சென்றால் வெளியே வர முடியாது. அந்த அளவுக்கு தடைகளை ஏற்படுத்துகிறது பேய்கள்.
அங்கு ஒரு பேய் படம் ஓடுகிறது. அந்த பேய் படத்திற்குள் சிக்கிக் கொள்கிறார் சந்தானம். அந்த பேய்களிடமிருந்து தப்பித்து வந்தால்தான் சந்தானத்தால் உயிர் பிழைக்க முடியும் என்கிற கண்டிஷனையும் தியேட்டரை ஆளும் பேய்கள் கூறுகின்றன. திரையில் ஓடும் படத்திற்குள் பேய்களிடம் சிக்கிய சந்தானம் மீண்டு வந்தாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
டிடி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்
சினிமாவுக்குள் ஒரு சினிமாவை வைத்து வித்தியாசமாக திரை கதை அமைத்துள்ளார் இயக்குனர் பிரேம் ஆனந்த். இடியாப்ப சிக்கல் போல் இருக்கும் கதையை திரையில் புரியும்படி காட்டி உள்ளார் இயக்குனர். இந்த கதையில் சந்தானம் தன்னுடைய டைமிங் காமெடிகளால் நிறைய இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். வழக்கமான சந்தானமாக இல்லாமல் கிஸ்ஸா கதாபாத்திரத்தில் தன்னுடைய ஹேர் ஸ்டைல், பாடி லாங்குவேஜ் என அனைத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.
படத்தில் சினிமா விமர்சகராக சந்தானம் நடித்திருந்தாலும் அவர் எந்த படத்தையும் விமர்சனம் செய்வது போல் ஒரு காட்சி கூட இல்லாதது அவரின் கேரக்டருக்கு வலு சேர்க்கவில்லை. சில மொக்கை படங்களையாவது எடுத்து விமர்சித்து இருக்கலாம்... அப்படி செய்திருந்தால் தான் இதற்காகத்தான் இவரை பேய் துரத்துகிறது என்று நம்பியிருக்கலாம். யூடியூப் விமர்சகர்களை ரோஸ்ட் செய்ய படத்தில் அவருக்கு ஸ்கோப் இருந்து அதை அவர் கையில் தொடாமல் நமக்கு எதுக்கு வம்பு என அடக்கி வாசித்திருக்கிறார்.
டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கிறது?
எலி காமெடி, டாய்லெட் காமெடி, சொம்பு காமெடி என மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோருக்கு சிக்னேச்சர் காமெடி காட்சிகளை வைத்து கலகலப்பாக படத்தை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். இதில் ஹைலைட்டே கௌதம் மேனன் - யாஷிகாவை காதலிக்கும் காமெடி தான். இவர்கள் அனைவருடன் சேர்ந்து சந்தானமும் தன் பங்கிற்கு அதகளம் செய்திருக்கிறார்.
இயக்குனர் செல்வராகவன் ஹிட்ச்காக் இருதயராஜ் என்ற பேயாக வந்து சந்தானத்தை ஆட்டிப்படைத்துள்ளார். யாஷிகா ஆனந்தும், கஸ்தூரியும் போட்டிபோட்டு கவர்ச்சி காட்டி உள்ளார்கள். ஆப்ரோ இசை ஓகே ரகம் தான். தீபக்குமார் ஒளிப்பதிவு அருமை. இயக்குனர் பிரேம் ஆனந்த் ஒரு சிக்கலான கதையை காமெடி காட்சிகளால் நிரப்பி நகைச்சுவை படமாக தந்திருக்கிறார். டிடி ரிட்டர்ன்ஸ் அளவுக்கு இப்படத்தில் நகைச்சுவை இல்லாதது சற்று பின்னடைவு