காதல் விருந்தாக வந்துள்ள வித் லவ்... டேஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் படம் வித் லவ். செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

With Love Movie Review
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் கவனம் பெற்ற அபிஷன் ஜீவிந்த், முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அனஸ்வரா ராஜன், காவ்யா அனில், சரவணன், தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள படம் ‘வித் லவ்’. சவுந்தர்யா ரஜினிகாந்த், பஸிலியான் நசரேத், மகேஷ்ராஜ் பஸிலியான் ஆகியோர் தயாரிப்பில் உருவான இப்படத்தை மதன், கதை, திரைக்கதை, எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
வித் லவ் படத்தின் கதை என்ன?
அம்மாவை இழந்த மன வேதனையோடு, தந்தையிடம் மனமுடைந்து வாழும் ஒரு இளைஞன் தான் அபிஷன் ஜீவிந்த். அவனது வாழ்க்கை சரியான பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில், அக்கா (ஆர்.ஜே. ஆனந்தி) அவனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறாள். மேட்ரிமோனி வழியாக ஒரு பெண்ணை தேர்வு செய்து, அவளை சந்திக்க அனுப்புகிறாள். அந்த சந்திப்பில்தான் எதிர்பாராத திருப்பம். அவன் பார்க்க வந்த பெண் (அனஸ்வரா ராஜன்) அவனுடைய பள்ளிக் கால தோழி என்பதைக் கொஞ்ச நேரத்தில் இருவருமே உணர்கிறார்கள்.
இங்கேயிருந்து படம் கடந்த காலத்துக்குள் மெதுவாக பயணிக்கிறது. பள்ளி நாட்களில் அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் (காவ்யா அனில்) காதல். அதே நேரத்தில், அந்தப் பெண்ணுக்கும் இன்னொரு இளைஞனுடன் (சச்சின் நாச்சியப்பன்) காதல் இருக்கிறது. பழைய நினைவுகளைப் பகிரும் போது, “நம்ம பழைய காதல்களை இப்போ நேரில் பார்த்தால் என்ன ஆகும்?” என்ற கேள்வி எழுகிறது. அந்த கேள்விதான் கதையை திருச்சிக்குத் தூக்கிச் செல்கிறது. பள்ளி, பழைய நண்பர்கள், மறைந்துபோன முகங்கள் அனைத்தையும் தேடி பயணிக்கிறார்கள். அப்போது என்னென்ன எதிர்பாரா சம்பவங்கள் நடந்தது என்பதை சுவாரஸ்யமாக சொல்லி உள்ள படம் தான் வித் லவ்.
வித் லவ் விமர்சனம்
படம் தொடங்கும் விதமே இயல்பானது. கல்யாணப் பெண்ணைப் பார்க்கச் செல்லும் இடத்தில் வரும் ஆரம்ப ட்விஸ்ட், கதையின் திசையை அழகாக கோடிட்டு காட்டுகிறது. ஆனால் முதல் பாதியில் சில இடங்களில் வசனங்கள் செயற்கையாக உணர வைக்கிறது. “இது தேவையா?” என்று தோன்றும் தருணங்களும் இருக்கிறது. குறிப்பாக, கல்யாணம் பேச வந்த பெண்ணிடம் ஒருவன் தன் பழைய காதலை வெளிப்படையாக சொல்வது, கதாபாத்திரத்தின் மனநிலைக்கு முழுமையாக பொருந்தவில்லை.
பள்ளிக் காதல் நினைவுகள் இருவருக்கும் உயிர்ப்புடன் இருக்கும் நிலையில், “எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு” எனும் வசனம் லாஜிக்கில் சறுக்குகிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் முழுக்க வேறு லெவலுக்கு சென்று விடுகிறது. இரண்டாம் பாதியில் இயக்குநர் மதன் தனது முழு திறமையையும் காட்டுகிறார். திரைக்கதை, நடிப்பு, எடிட்டிங், பின்னணி இசை அனைத்தும் சேர்ந்து படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஆசிரியர் கதாபாத்திரம் (சரவணன்) தோன்றும் காட்சிகள், கதைக்கு பெரிய திருப்பம் கொடுக்காவிட்டாலும், சொல்லப்பட்ட விதம் மனதில் நிற்கிறது.
வித் லவ் ரிவ்யூ
பெண்ணின் தனித்தன்மை, சுயமரியாதை, பெண்ணுரிமை ஆகியவை எந்த பிரசங்கமும் இல்லாமல் இயல்பாக சொல்லப்பட்டிருக்கிறது. இது இயக்குநரின் பெரிய பலம். முதல் பாதியில் வந்து மறையும் ஒரு கதாபாத்திரம், இரண்டாம் பாதியில் எடுக்கும் மாற்றம் உண்மையிலேயே ஆச்சரியம்.
‘உள்ளம் கேட்குமே’ படத்தில் லைலா கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கத்தை நினைவூட்டும் அளவுக்கு அந்த பாத்திரம் எழுதப்பட்டுள்ளது. உண்மைக் காதலன் ஒருவன், காதலியை இழந்த பின் அனுபவிக்கும் மனநிலை, அந்த உணர்வை காட்சிகளாக மாற்றிய விதத்தில் இயக்குநரின் கிராஃப்ட் தெளிவாக தெரிகிறது.
வித் லவ் படம் எப்படி இருக்கு?
அனஸ்வரா ராஜன், கண்களாலும் மெல்லிய முகபாவனைகளாலும் கதையை தூக்கிச் செல்கிறார். உணர்வு மாற்றங்கள் அருமை. காவ்யா அனில், கேமரா முன்னால் தேவதை போல. உடல் மொழியும் நடிப்பும் கண்களை விட்டு நகரவில்லை. அபிஷன் ஜீவிந்த், ஹீரோவாக முழுமையாக பாஸ். குறிப்பாக இரண்டாம் பாதியில் நடிப்பு கனமாகிறது. தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் ஆகியோர் தங்களுக்கான இடத்தில் சரியான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள்.
ஷ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு சூப்பர். ஷான் ரோல்டன், பின்னணி இசையில் முழு ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார். இரண்டாம் பாதியை வேகமாக நகர்த்தி உள்ளது சுரேஷ்குமாரின் எடிட்டிங். முதல் பாதியில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், ‘வித் லவ்’ இன்னும் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும். இருந்தாலும், உணர்ச்சிகளால் இணைக்கும் இரண்டாம் பாதி இந்தப் படத்தை ஒரு நல்ல அனுபவமாக மாற்றுகிறது.

