Scene Review : தீபாவளி வின்னராக மாறியதா சூர்யாவின் சீன்? முழு விமர்சனம் இதோ
Scene Full Movie Review : ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா போலீஸாக நடித்து, தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகி உள்ள சீன் திரைப்படத்தின் முழு விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Scene Movie Review
நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. ஏற்கனவே வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என இரண்டு படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘சீன்’ திரைப்படம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் என பலரும் இணைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை கொடுத்ததா? சூர்யா ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தாரா? விரிவாகப் பார்க்கலாம்.
சீன் படத்தின் கதைக்களம்
படத்தின் தொடக்கத்திலேயே நஸ்லென் ஒரு சாதாரண மனிதர் கிடையாது, மிகவும் ஆபத்தான சைக்கோ கொலையாளி என்பதை உணர்த்தும் காட்சிகள் இடம்பெறுகின்றன. அதன்பிறகு கதை சூர்யாவின் கதாபாத்திரத்தை நோக்கி நகர்கிறது. காவல்துறை அதிகாரியாக இருக்கும் சூர்யா, தனக்கென சில விதிமுறைகளை வைத்துக்கொண்டு, வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் ஒரு வித்தியாசமான அதிகாரியாக அறிமுகமாகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா கண்டுபிடித்த ஒரு சைக்கோ கொலையாளி தற்போது சிறையில் இருக்கிறார். ஆனால், அந்தக் கொலையாளி பயன்படுத்திய அதே பாணியில் மீண்டும் கொலைகள் நடைபெறத் தொடங்குகின்றன. இதனால், பழைய வழக்குடன் தொடர்புடைய புதிய மர்மம் உருவாகிறது. இதற்கிடையில், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் காவல்துறை பணியிலிருந்து விலக சூர்யா முடிவெடுக்கிறார். ஆனால், நஸ்லென் தொடர்ந்து செய்யும் கொலைகள் அவருடைய கவனத்தை ஈர்க்கின்றன. இந்த வழக்கு சூர்யாவின் ஈகோவையும் நேரடியாகத் தூண்டுகிறது.
தனது சொந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டிய சூழலில், நஸ்ரியாவின் உதவியுடன் சூர்யா விசாரணையைத் தொடர்கிறார். இதற்கிடையில், தனது பெற்றோரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருகிறார். ஒருபுறம் குடும்பப் பிரச்சினைகள், மறுபுறம் புத்திசாலித்தனமான சைக்கோ கொலையாளியின் சவால் என இரண்டையும் எதிர்கொள்ளும் சூர்யா, இறுதியில் நஸ்லெனைப் பிடித்தாரா? இந்த மர்மமான கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
சீன் விமர்சனம்
இந்தப் படத்தில் சூர்யாவின் நடிப்பு தனித்துவமாக அமைந்துள்ளது. வழக்கமான ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல், நகைச்சுவை, ஈகோ, விசாரணை என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக, தனது தனிப்பட்ட பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டு நஸ்ரியாவுடன் இணைந்து நஸ்லெனை எதிர்கொள்ளும் காட்சிகளில் சூர்யாவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் நஸ்லெனை நேரடியாகச் சந்திக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. அந்த இடங்களில் சூர்யாவின் உடல்மொழி, வசன உச்சரிப்பு ஆகியவை கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.
100-க்கும் மேற்பட்ட கொலைகளைச் செய்ததாகக் கூறப்படும் புத்திசாலித்தனமான சைக்கோ கொலையாளி கதாபாத்திரத்தில் நஸ்லென் நடித்துள்ளார். அவருடைய நடிப்பில் தேவையற்ற அலட்டல்கள் இல்லை. அமைதியாகப் பேசுவது, இயல்பான முகபாவனைகள் மற்றும் கதாபாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்தும் விதம் என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. ஒரு கொடூரமான கொலையாளியாக இருந்தாலும், தனது நடிப்பில் தனித்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, சூர்யாவுடன் நேருக்கு நேர் மோதும் காட்சிகளில் நஸ்லென் ஆக்டிங் வேறலெவல்.
படத்தின் ஆரம்பத்தில் நஸ்ரியாவின் கதாபாத்திரம் சற்று மெதுவாக நகர்வதால், சில காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு சுவாரஸ்யமாக அமையவில்லை. ஆனால், இரண்டாம் பாதியில் அவருடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. சூர்யாவுடன் இணைந்து விசாரணையில் ஈடுபடும் காட்சிகளில் நஸ்ரியா சிறப்பாக நடித்துள்ளார். மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையாக நடித்த ஆனந்த் ராஜ் தனது நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான தாயின் கதாபாத்திரமும் கதைக்கு தேவையான உணர்வுகளை வழங்குகிறது. காவல்துறை அதிகாரிகளாக நடித்த ராஜ் பிரியன் மற்றும் வினோத் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.
சீன் ரிவ்யூ
படத்தின் முதல் பாதியில் நஸ்லென் தொடர்பான மர்மம் சுவாரஸ்யமாகத் தொடங்குகிறது. ஆனால், அதே நேரத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் எந்த நோக்கத்தை நோக்கி நகர்கிறது என்பது சில இடங்களில் தெளிவாகப் புரியவில்லை. கதையின் முக்கியமான அம்சங்கள் ஒன்றோடொன்று இணைவதற்கு சற்று நேரம் எடுத்துக்கொள்கின்றன. இதனால், சில காட்சிகளில் வேகம் குறைந்து, பார்வையாளர்களுக்கு சிறிய குழப்பம் ஏற்படுகிறது. நஸ்ரியா கதைக்குள் வந்த பிறகுதான், படம் எதை நோக்கிச் செல்கிறது என்பது தெளிவாகத் தொடங்குகிறது.
படத்தின் மிகப்பெரிய பலம் இரண்டாம் பாதிதான். சூர்யாவுக்கும் நஸ்லெனுக்கும் இடையே நடைபெறும் புத்திசாலித்தனமான மோதல், ஒரு கேட் அண்ட் மவுஸ் விளையாட்டைப் போல சுவாரஸ்யமாக நகர்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு காட்சியிலும் புதிய திருப்பங்கள் உருவாகின்றன. குறிப்பாக, கடைசி 30 நிமிடங்களில் நடைபெறும் சம்பவங்கள் படத்தின் வேகத்தை அதிகரிக்கின்றன. இயக்குநர் ஜித்து மாதவனின் தனித்துவமான கதை சொல்லும் பாணி பல இடங்களில் வெளிப்படுகிறது.
சீன் படம் எப்படி இருக்கு?
தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கும்போது, படத்தின் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. காட்சிகளின் சூழலுக்கு ஏற்ப கேமரா பயன்படுத்தப்பட்ட விதம், கதையின் மர்மத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கிறது. அதேபோல், சுஷின் ஷ்யாம் இசையமைத்த பின்னணி இசை படத்திற்கு முக்கியமான பலமாக இருக்கிறது. குறிப்பாக, சூர்யா மற்றும் நஸ்லென் நேருக்கு நேர் மோதும் காட்சிகளில் பின்னணி இசை அந்தச் சூழலுக்கு தேவையான பரபரப்பை உருவாக்குகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, காட்சிகளின் உணர்வுகளுடன் பொருந்தும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. திரையரங்கில் மாஸ் மற்றும் நகைச்சுவை கலந்த ஒரு சுவாரஸ்யமான படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு ‘சீன்’ நல்ல தேர்வாக இருக்கும்.





