சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமையிலான சியோன் ஃபிலிம்ஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து தயாரிக்கும் "வித் லவ்" படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

With Love Movie Release Date : எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் சார்பில் நசரத் பாசிலியன் மற்றும் மகேஷ் ராஜ் பாசிலியன் ஆகியோர் சௌந்தர்யா ரஜினிகாந்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள "வித் லவ்" திரைப்படம் 2026, பிப்ரவரி 6 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தை மதன் எழுதி இயக்குகிறார். புத்தாண்டு வாழ்த்துக்களுடன் கூடிய புதிய போஸ்டரை வெளியிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

ஒரு ஃபீல் குட் ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தின் 'அய்யோ காதலே' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. படத்தின் டைட்டில் டீசர் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போதைய காலகட்ட இளைஞர்களின் வாழ்க்கையை இப்படம் காட்டுகிறது. அதை துல்லியமாக பிரதிபலித்த படத்தின் டைட்டில் டீசருக்கு இளம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஹீரோவான டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்

இந்த ஆண்டின் தமிழ் பிளாக்பஸ்டர் படமான 'டூரிஸ்ட் ஃபேமிலி'யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அதன் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இந்த ரொமான்டிக் டிராமா மூலம் முதல்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். 'லவ்வர்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மதன், முதல்முறையாக இயக்கும் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காதல், நகைச்சுவை கலந்து இப்படம் உருவாகியிருப்பதை டைட்டில் டீசரும், பாடலும் உணர்த்துகின்றன. 'குட் நைட்', 'லவ்வர்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்து கவனம் ஈர்த்த எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட், இப்படத்தின் தயாரிப்பிற்காக சௌந்தர்யா ரஜினிகாந்தின் சியோன் ஃபிலிம்ஸுடன் இணைந்துள்ளது. ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், சரவணன் ஆகியோர் இப்படத்தின் மற்ற முக்கிய நட்சத்திரங்கள். படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.